திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் நெல் மகோற்சவ திருவிழா

குண்டையூரில் இருந்து நெல் மலையை ஆரூரில் சமர்ப்பிக்க பூதகணங்கள் புறப்பட்டன
தருமை ஆதினத்திற்கு சொந்தமான, திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில், நெல் மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. குண்டையூர் கிழார் திருவாரூருக்கு உணவு பண்டங்கள் அனுப்பி வந்த காலத்தில், திடீரென பஞ்சம் ஏற்பட்ட போது, நெல்மலை ஒன்றை, இறைவன் தந்து மறைந்துள்ளார். தொடர்ந்து, அந்த நெல் மலையை திருவாரூருக்கு பூதகணங்கள் உதவியோடு கொண்டு செல்லும் ஐதீக விழா, நெல் மகோற்சவ விழாவாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை, சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின. தொடர்ந்து, ஸ்ரீ கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை ஆரூரில் சோ்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், நெல் மலையோடு பூதங்கள் ஆரூருக்கு புறப்பட்டது.
Next Story