தஞ்சை அருகே ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

X
தஞ்சையில் 1050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் காவலர்கள் கும்பகோணம் புறவழிச் சாலையில் பாபநாசம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பாபநாசத்தை அடுத்த தேவராயன்பேட்டை மாமரத்து கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் (வயது 42) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் அருகில் உள்ள ஒரு இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியதில், பண்டாரவாடை பாபநாசம், வங்காரம் பேட்டை, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீன் பண்ணை மற்றும் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினர் தியாகராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

