அதிக மழை

X
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. சர்வ சாதாரணமாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் ஈரோடு மக்களை குளிர்விக்கும் வகையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் நீர்குளம் போல் தேங்கியது. சுமார் ஒரு மணி நேரம் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து நேற்றும் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் சிறிதளவு வெயில் அடித்தாலும் மதியம் பல்வேறு பகுதியில் லேசான சாரல் மழை பெய்து தொடங்கியது. மாலை நேரங்களில் அந்த மழை பரவலாக பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை 30 நிமிடம் பரவலாக மழை பெய்தது. இதனால் வழக்கம் போல் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கின்றது. ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட் பகுதியில் வழக்கம் போல் சேரும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மாவட்டத்தில் பவானியில் அதிகபட்சமாக 25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அம்மாபேட்டை பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதேபோல் மாவட்டத்தில் அணைப்பகுதிகளான குண்டேரி பள்ளம் , வரட்டு பள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் கொடுமுடி கோபி சென்னிமலை பெருந்துறை மொடக்குறிச்சி தாளவாடி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் 2 -வது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் நேற்றும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மாவட்ட முழுவதும் சேர்த்து மொத்தம் 176 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-பவானி - 25.40, கவுந்தப்பாடி - 18.40, குண்டேரி பள்ளம் - 18.40, அம்மாபேட்டை - 17.40, வரட்டு பள்ளம் - 12.60, சத்தியமங்கலம் - 12, ஈரோடு - 10, கோபி - 9.20, பவானிசாகர் - 8.80, கொடுமுடி - 8, சென்னிமலை - 7, பெருந்துறை - 5.30, மொடக்குறிச்சி - 2, தாளவாடி - 2
Next Story

