உலக சிறுநீரக தினம்

X
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ரெட் கிராஸ் அமைப்புடன் இணைந்து நேற்று உலக சிறுநீரக தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், சிறுநீரகம் மற்றும் உடல் உறுப்புகள் தானமாக வழங்க காரணமான குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவுக்கு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை சேர்மேன் டாக்டர் தங்கவேலு தலைமை தாங்கினார். அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் டாக்டர் டிஜி ராமமூர்த்தி கலந்து கொண்டார். தொடர்ந்து, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்கு காரணமாக இருந்த 4 குடும்பங்களுக்கு உறுப்பு தானம் அமைப்பில் இருந்து வழங்கப்பட்ட கேடயங்களை வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், சிறுநீரக நோய் குறித்தும், சிறுநீரக தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில், சசிகலா, ரவி, மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழகம் 6 ஆண்டுகளாக முதலிடம் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறுகையில், தமிழகம் முழுவதும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் பேர் மாற்று சிறுநீரகம் தானமாக பெற, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சிறுநீரக தானம் பெறுவது சிரமமாக உள்ளது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் உறவினர்கள் மூலமும், 20 சதவீதம் பேர் மூளைச்சாவடைந்தவர்கள் மூலம் சிறுநீரகம் மற்றும் உடலுறப்புகள் பெறப்படுகிறது. இது முன்னேறிய நாடுகளில் தலைகீழாக உள்ளது. ஆனால் உடல் உறுப்பு தானம் வழங்குவதில் தமிழகம் இந்தியாவிலேயே கடந்த 6 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் வழங்குவது சம்பந்தமாக மேலும் விழிப்புணர்வு தேவை, என்றார்.
Next Story

