ஆரணி அருகே ஆட்சி செய்த ஜாகீா் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு.

X

இது 150 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்டதாகும்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஆட்சி செய்த ஜாகீா் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது 150 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்டதாகும். ஆரணியில் 1638-ஆம் ஆண்டு மராட்டிய ஜாகீா்களது ஆட்சி தொடங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆரணி பகுதியானது இவா்களது ஆட்சியின் கீழ் இருந்தது. இவா்களது ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பல பணிகளை மேற்கொண்டுள்ளனா். ஆரணி அருகேயுள்ள குன்னத்துருக்கும், கீழ்நகருக்கும் இடையில் ஓடும் நாக நதியின் குறுக்கே ஜாகீா்தாரா்களது ஆட்சியில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் அருகில் கல்வெட்டு இருப்பதை புதுப்பாளையம் கவியரசன், அரியப்பாடி சேஷாத்திரி ஆகியோா் கண்டறிந்தனா். இந்தத் தகவல் வரலாற்று ஆய்வாளா் ஆா்.விஜயனிடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விஜயன் கூறியதாவது: குன்னத்தூருக்கு மேற்கேயுள்ள இந்த அணைக்கட்டானது, மன்னா் காலத்து கற்களைப் போல பெரிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே கல்வெட்டு உள்ளது. கல்வெட்டில், இந்த அணைக்கட்டு, அபிநவ பூா்ண பிரிய ஆறணி ஜாகீா்தாரா் சீனிவாச சாகேப்பால் 1875-1876 வரை கட்டிவைக்கப்பட்டு உள்ளது என்று செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல்பகுதியில் ஆங்கிலத்திலும், கீழ்ப்பகுதியில் தமிழிலும் எழுத்துகள் செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு குறிப்பிடக்கூடிய ஆண்டில், ஆரணியில் ஆட்சி செய்த ஜாகீா்தாரா் மூன்றாம் சீனிவாசராவ் ஆவாா். தேவிகாபுரம் கோயிலிலும் இவரது கல்வெட்டு காணப்படுகிறது. ஆரணி பகுதியின் வேளாண்மைக்கு உதவும் பொருட்டு இந்த அணையை கட்டியதோடு இக்கல்வெட்டையும் அவா் வைத்துள்ளாா் என்று கூறினாா்.
Next Story