சேவூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தை சேதப்படுத்திய டிரைவர் கைது

ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு இருந்த கைப்பிடி கம்பியை மணிகண்டன் சேதப்படுத்தியதால் கீழே விழும் அபாயத்தில் உள்ளது.
ஆரணி, ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தை மதுபோதையில் தாக்கி சேதப்படுத்தியும், ஊராட்சி செயலரை கத்தியை காட்டி மிரட்டியதாகவும் சேவூரைச் சேர்ந்த டிரைவரை ஆரணி கிராமிய போலீஸார் கைது செய்தனர். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் ராம் நகரில் வடிவேல் மகன் மணிகண்டன்(8) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் வெளிப்புறம் குடிநீர் குழாய் தொட்டி உள்ளது. இவர் வசிக்கும் தெருவில் புதிய சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஜேசிபி சாலையில் மண் கொட்டி சமன் செய்யும்போது மணிகண்டன் வீட்டின் வெளிப்புறம் இருந்த குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவர் சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று நான் கட்டியிருந்த குடிநீர் தொட்டியை ஏன்டா உடைத்தீர்கள் என மதுபோதையில் ரகளை செய்தார்.மேலும் பெரிய கத்தியை கொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்தார். கைப்பிடி கம்பியை சேதப்படுத்தினார். மேலும் ஊராட்சி செயலர் புருஷோத்திடம் வெளியே வாடா உன்னை என்ன செய்கிறேன் பார் என கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் ஆரணி சேவூர் ஊராட்சிசெயலர் புருஷோத் ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கொடுத்ததின்பேரில சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று மணிகண்டனை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலும் சேவூர் ஊராட்சி செயலர் புருஷோத் புகார் கொடுத்ததின்பேரில் ஊராட்சிமன்ற அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும், கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை சிறையில் அடைத்தனர்.
Next Story