வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை ஆட்டோ டிரைவர் கைது

X
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜித்தா பாஹல் சாஹூ(வயது 42). இவர் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊர் செல்வதற் காக நேற்று முன்தினம் இரவு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஜித்தா பாஹல் சாஹூ வந்தார். ஜெய்வாபாய் பள்ளி அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரூபன் (22) மீது லேசாக ஜித்தா பாஹல் சாஹூயின் கை பட்டு விட்டதாக கூறப்படுகிறது. உடனே ஜித்தா பாஹல் சாஹூ மன்னிப்பு கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரூபன், ஜித்தா பாஹல் சாஹூயை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த ஜித்தா பாஹல் சாஹூ அருகில் கிடந்த கல் மீது விழுந்தார். இதில் அவரது தலை மோதி உடைந்து ரத்தம் சிந்தியது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே ஜித்தா பாஹல் சாஹூ உயிரிழந்தார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து ஜித்தா பாஹல் சாஹூ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ரூபன் தாக்கியதில் ஜித்தா பாஹல் சாஹூ கீழே விழுவது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் ரூபனை போலீசார் கைது செய்தனர். ஒருவரையொருவர் உரசிக் கொண்டதில் வடமாநில தொழிலாளி மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை அடித்துக்கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Next Story

