காஞ்சி புதிய ரயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடக்கும் ஆவணங்கள்

X
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், 2002ம் ஆண்டு துவக்கப்பட்ட புதிய ரயில் நிலையத்தில், கணினி முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையம் இயங்கி வருகிறது. இங்கு சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், புதுச்சேரி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும் 'பாசஞ்சர்' ரயிலும், நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தொலைதுார இடங்களுக்கும், வாராந்திர ‛எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ரயிலில் பயணித்து வருகின்றனர் .இந்நிலையில், ரயில் நிலையத்தில் இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய அலுவலக பதிவேடுகள், குறிப்பேடுகள், பயணியர் முன்பதிவு விபரம் அடங்கிய குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள், ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு மற்றும் பணியாளர் ஓய்வு அறைக்கு வெளியே கேட்பாரின்றி குப்பை போல போடப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே துறைக்கு சொந்தமான ஆவணங்கள் மாயமாகும் சூழல் உள்ளதால், ஆவணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பாதுகாப்பின்றி குப்பைபோல போடப்பட்டுள்ள ஆவணங்களை இருப்பு அறையில் வைத்து பாதுகாக்க, காஞ்சிபுரம் ரயில் நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

