கிராம விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர். வி. எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்

X
தஞ்சாவூர் ஆர். வி. எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் (RAWE) திட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு, வருவாய் கோட்டாட்சியர் (பொ) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் தர்மேந்திரா (பட்டுக்கோட்டை), சுப்பிரமணியன் (பேராவூரணி), சுந்தரமூர்த்தி (திருவோணம்) ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு, தங்களது முக்கிய விவசாயப் பிரச்சனைகளை முன்வைத்துப் பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை, மின்சாரம், நகராட்சி, பொறியியல், வட்டார வளர்ச்சி, நீர்வளம், நிலம், சாலை மற்றும் பிற துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, தீர்வுகளை வழங்கினர். மாணவர்கள், விவசாயிகளும், அரசு அலுவலர்களும் நேரடியாக குறைகளை விசாரணை செய்த விதத்தை கவனித்து, அரசாங்கத்தின் நிர்வாக செயல்முறைகள் மற்றும் விவசாயப் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து பயனுள்ள அனுபவங்களை பெற்றனர். இந்த அருமையான பணி அனுபவத்தை வழங்கிய வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பங்கேற்ற அனைத்து அலுவலர்களுக்கும் மாணவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story

