மரத்தில் இருந்து விழுந்ததாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வாலிபர்,

X
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கரியகோவில் அருகே பாச்சாடு பகுதியை சேர்ந்தவர் சோபிராஜ் (வயது 33). அவருடைய மனைவி தீபா. கடந்த 7-ந் தேதி வலது தொடை மற்றும் அடிவயிற்று பகுதிகளில் சோபிராஜ் படுகாயமடைந்தார். தீபா, அதே பகுதியை சேர்ந்த சோபிராஜ் நண்பர் முருகேசன் (37) ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சோபிராஜை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை மாமரத்தில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளதாக இருவரும் சேர்த்துள்ளனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சோபிராஜிக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவருடைய உடலில் பால்ரஸ் குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கரியகோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சோபிராஜ் நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில் படுகாயம் அடைந்தது அம்பலமாகி உள்ளது. அதாவது, கடந்த 6-ந் தேதி இரவு முருகேசன், சோபிராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை, செல்வம் ஆகியோர் நாகலூர் கல்லூத்து ஓடை வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது முருகேசன் உரிமம் இல்லாத தனது நாட்டுத்துப்பாக்கியை எடுத்து சென்றுள்ளார். அங்கு தவறுதலாக நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில் சோபிராஜ் உடலில் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

