இரட்டை எஞ்சின் ஆட்சியை அகற்ற மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் - விஜூ.கிருஷ்ணன்

X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட சிபிஎம் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே, அண்ணா நூற்றாண்டு அரங்கில் சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு, மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் என்.சீனிவாசன், மூத்த தோழர்கள் ஆர்.சி. பழனிவேலு, கோ.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில், "செம்மொழி இருக்க மும்மொழி திணிப்பா" என்ற தலைப்பில் தமுஎகச மாநில துணைத்தலைவர் ந.முத்துநிலவன் பேசியது, "தமிழகத்தில் இந்தியை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் திணிப்பை எதிர்க்கிறோம். நமது பாரம்பரியம் வெற்றுப் பெருமை அல்ல. தமிழின் உண்மையான பெருமை நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. தொன்மையான மொழிகள் பல வழக்கொழிந்து போய் விட்டன. சிதைந்து விட்டன. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. ஆனால், செம்மொழி தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பேச்சாக, எழுத்தாக, மூச்சாக புழக்கத்தில் உள்ளது. இலக்கியம் நிறைந்த, ஜனநாயகமான மொழியான தமிழுக்கு இன்று ஆபத்து வந்துள்ளது. இந்தி படித்தால் என்ன நட்டம், மூன்று மொழி தெரிந்தால் என்ன என்கிறீர்கள், தமிழ் மொழி கண் போல, மற்ற மொழிகள் கையில் உள்ள டார்ச் விளக்கு போல, கண் இருந்தால் தான் டார்ச் பயன்படும். இதுதான் தாய் மொழியின் அவசியம். தமிழ் மொழியில் இல்லாதது, மற்ற மொழியில் அப்படி என்ன உள்ளது. தமிழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் அறிவியலின் சாட்சியாக உள்ளது. இந்தியை முதன் முதலில் 1881இல் மாநில மொழியாக ஏற்றுக் கொண்ட பீகாரின் நிலைமை என்ன..? கல்வி, அறிவியலில் மாநில அளவில் கடைசி இடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரத்திலேயே உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மொழிவாரி மாநிலங்கள் கல்வி, அறிவியல், பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களாக உள்ளது. தாய்வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் தான் சிறப்பிடம் பெறுகின்றனர். மாணவர்கள் மும்மொழி படிக்க வேண்டும் என்ற நிர்பந்திப்பது, மாணவர்களின் அறிவை சிதைக்கும் செயல். தேவையென்றால் நமக்கு தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. தாய்மொழியில் பயின்று, உயர்கல்வி அறிவுக்கு தொடர்பு மொழியாக ஆங்கிலம் படித்த, சிங்கப்பூர் உலகில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. மகாத்மா காந்தி தன் சுயசரிதையை தாய்மொழியான குஜராத்தியில் தான் தன் சுயசரிதையை எழுதினார். சென்னை வந்த காந்திக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைத்த போது, "எனது தாய் மொழி குஜராத்தி, உங்கள் தாய்மொழி தமிழ், பிறகு இதற்காக ஆங்கிலத்தில் வரவேற்பு" என்றார். இன்று குஜராத்தில் பிறந்த மோடியும், அமித்ஷாவும் இந்தியை தூக்கிப் பிடித்து திரிவது எதற்காக...? ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தலைவன் இதுதான் அவர்களின் திட்டம். தமிழகத்தில் அவர்கள் பருப்பு வேகாது. மருத்துவம், பொறியியலில் தலைசிறந்த கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளது. பிற மாநிலத்தவர்களுக்கு வேலை தருகிறது. தமிழ்நாடு கல்வி, வேலைவாய்ப்பில் முதலிடத்தில் உள்ளது. தமிழர் நாகரிகம் தொன்மையானது. தமிழ்நாடு இலக்கணத்திலும் சிறந்தது. எங்களுக்கு மூன்றாவது மொழி தேவை இல்லை, வேண்டுமென்றால் கற்றுக் கொள்வோம். அதை நீ சொல்ல வேண்டியது இல்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுத்த மாநிலமான குஜராத், மராட்டியத்தில் இன்று அவர்களுடைய சொந்த மொழி இல்லை. மொழி அழிக்கப்பட்டது. மராட்டிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட மாநிலத்தில் இன்று இந்திப்படங்களை தயாரிக்கும் நிலை. இதை நாங்கள் சொல்லவில்லை. ஐநா சபை ஆய்வு அறிக்கை சொல்கிறது. உலகம் முழுவதும் உள்ள 7,000 மொழிகளில் 2, 000 மொழிகள் அழிந்துவிட்டது. இந்தியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்துவிட்டது. சில மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லாமல் போய் விட்டது. இந்தி திணிப்பை நாம் அலட்சியமாக விட்டு விடக்கூடாது. இன்று பத்து வயதுக்கு கீழான குழந்தைகள் பெயர் தமிழில் இல்லை. மாடர்னாக பெயர் வைக்கிறோம் என நினைத்து, நாம் தமிழை மறந்து வருகிறோம். நமது செல்போனில் உள்ள காண்டாக்ட் பெயர் கூட ஆங்கிலத்தில் தான் உள்ளது. தமிழை வளர்ப்பதல்ல நமது நோக்கம், அதை முதலில் அழியாமல் பாதுகாப்பது தான் முக்கியம்" இவ்வாறு பேசினார். "நிலம் எங்கள் உரிமை" என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் விஜூ.கிருஷ்ணன் பேசினார். அவர் பேசி, " இங்கே உள்ள காகிதப் புலி சீமான் கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்.. கீழவெண்மணியும், வாச்சாத்தியும் கம்யூனிஸ்ட்கள் யார் என்பதை சொல்லும். இன்று பெரும்பாலான தமிழக உணவகங்களில், இந்தி படித்த வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அங்கு வேலை வாய்ப்புகள் இல்லை. சில மாநிலங்களில் உணவுக்கு பசி காரணமாக மாங்கொட்டை பருப்பை தின்று வாழும் சூழ்நிலை. தென் மாநிலங்களில் அப்படி இல்லை. இந்தியை படிக்க வேண்டும் என்று மோடி சொல்கிறார். எந்த மொழியை படிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது, அது எனது தனிப்பட்ட உரிமை. அதில் எவரும் தலையிட முடியாது. இந்த மொழியை தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. நிலத்துக்கான போராட்டத்தை இந்தியாவில் முன்னெடுத்தது கம்யூனிஸ்ட் இயக்கம். 1936 இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவானது. அசாம், திரிபுரா, உத்தர பிரதேசம், பஞ்சாப், பீகார், பெங்கால், மகாராஷ்ட்ரா, கர்நாடக, கேரளா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தியாகிகளால் நடத்தப்பட்ட போராட்டம் சாதாரணமானதல்ல, இன்று விவசாயிகளிடம் நிலம் இருப்பது என்றால் அது செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டம் தான் காரணம். சோவியத் ரஷ்யாவில் 1917 இல் மாமேதை லெனின் உருவாக்கிய இயக்கம் ஒரு புரட்சியை நடத்தி எதிர் புரட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை கைப்பற்றி அங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றனர். இதே போல் இந்தியாவிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு செங்கொடி இயக்கம் பாடுபட்ட நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. வங்கத்தில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதேபோல் கேரள மாநிலத்திலும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது நிலபிரபுக்களிடம் மிதமிஞ்சி சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு தானியங்களை செங்கொடி இயக்கம் அவற்றை பறித்து பசியால் பட்டினியால் வாடிய மக்களுக்கு வழங்கியது. இதுபோன்ற செங்கொடி இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களால் தான் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சி டாக்டர் ஜே.சி.குமரப்பா தலைமையில் ஒரு குழு அமைத்து இந்திய விவசாயிகள் படக்கூடிய கஷ்டங்கள் குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில்தான் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. நிலத்துக்கான போராட்டம் என்பது நமது வார்த்தைகளால் அல்ல, செயலால் செய்யப்பட்டது. கேரளாவில் கையூர், பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள், அசாம் சுருபா பள்ளத்தாக்கில் நடத்திய விவசாய பேரியக்கம், மகாராஷ்டிரா ஆதிவாசிகள் நடத்திய நில உரிமை மீட்பு என வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள் செங்கொடி இயக்கத்தினர், இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் வீரத்தெலங்கானா போராட்டம், ஹைதராபாத் நிஜாம் மன்னர்களுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் பயனாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அவர்களிடமிருந்து எடுத்து, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக 1957 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் இ.எம்.எஸ் தலைமையிலான இடது ஜனநாயகம் முன்னணி ஜானக பூர்வமான முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தது. பல்வேறு மாநிலங்களில், சட்டங்களை காரணம் காட்டி, விவசாயிகளை விவசாய நிலங்களில் இருந்து வெளியேற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய முழுவதும் நிலத்துக்கான போராட்டங்களை விவசாயிகள் சங்கமும், செங்கொடி இயக்கமும் முன்னெடுத்து வருகின்றன. இந்த ஒன்றிய அரசாங்கத்திடம் ஏழை விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு நிலம் இல்லை. ஆனால் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கொடுப்பதற்கு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. தொழில் பூங்கா என்ற பெயரில் விவசாயிகளிடம் இருக்கும் நிலத்தை பெரு முதலாளிகளுக்கு பறித்துக் கொடுக்கும் நிலை தான் நாடு முழுவதும் உள்ளது. கிட்டத்தட்ட 18 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் 4,500 தொழில் பூங்காக்கள் அமைக்க அரசால் அடிமாட்டு வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில்கள், தேவாலயங்கள், வக்பு வாரியங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் விவசாயிகள் விவசாயம் செய்ய உரம், இடுபொருட்கள், மானியங்கள் வழங்கப்படாமல் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களுக்குமான, உறவு முற்றிலும் துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் அவர்கள் நிலங்களை விட்டு பல்வேறு காரணங்களால் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 72 ஆயிரம் விவசாயிகள் நிலமற்றவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். நவீன தாராளமயம் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை செங்கொடி இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் சுட்டிக்காட்டியது, 1995 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் தந்த கணக்கின்படி 3 லட்சத்து 25 ஆயி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014 இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்படும் என்று சொன்னார்கள். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்படும், குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். உரம், இடுபொருட்கள் மானியம் வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை இருநூறு நாளாக உயர்த்தி வழங்கப்படும். விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படும். விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்ற நிறைய வாக்குறுதிகளை தந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த 2014 முதல் தற்போது வரை அவர்கள் கொடுத்த கணக்கின்படி ஒரு லட்சம் விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடி புலம்பெயர்ந்து வருகின்றனர். மூன்றே கால் லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆக மொத்தம் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் விவசாயிகள், தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல மாநிலங்களில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலைகள் அரசாங்கத்தால் பதிவு செய்யப்படுவதில்லை. பெண்கள், பட்டியல் இனத்தவர்கள், ஆதிவாசிகள், நிலமற்றவர்கள் தற்கொலைகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளது. இதையெல்லாம் கணக்கில் எடுத்தால் மோடி அரசு ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மனித குல வரலாற்றில் அரசாங்கத்தின் நெருக்கடிகளால் இப்படி லட்சக்கணக்கான தற்கொலைகள் நடந்ததில்லை. டெல்லி சலோ என விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது மோடி அரசு. விவசாயிகளும், தொழிலாளர்களும் செங்கொடி இயக்கத்தின் துணையோடு அச்சம் இல்லை, அச்சம் இல்லை என சமரசமற்ற ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நானூறு இடத்திற்கு மேல் வெற்றி பெறுவோம் என்றார்கள். அப்படி வந்தால் 'ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மதம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், செங்கொடி இயக்கத்தினரும் தடையை ஏற்படுத்தி விட்டனர். இலங்கையில் விவசாயிகள் தொடங்கி வைத்து, மாணவர்கள், பெண் நடத்திய போராட்டம் ஆட்சியை மாற்றி அமைத்தது., அதேபோல் இங்கேயும் இரட்டை எஞ்சின் ஆட்சியை மாற்றி அமைக்க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், கட்சியினர், அரங்க தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வில், பூதலூர் தியாகி என்.வி.கலைக்குழு ரமேஷ் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார். முன்னதாக வரவேற்புக்குழு பொருளாளர் எஸ். செல்வராஜ் வரவேற்றார். நிறைவாக, சிபிஎம் தஞ்சை மாநகரச் செயலாளர் எம். வடிவேலன் நன்றி கூறினார். பெட்டிச் செய்தி கருத்தரங்கில், அகில இந்திய மாநாட்டு நிதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சாவூர் மாவட்டக்குழு சார்பில், ரூ.13 லட்சத்து 48 ஆயிரத்து 640 மத்தியக்குழு உறுப்பினர் விஜூ.கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.
Next Story

