டாஸ்மாக் ஊழல் பத்து ரூபாயில் தொடங்கி ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது : தமிழிசை குற்றச்சாட்டு
டாஸ்மாக் ஊழல் பத்து ரூபாயில் தொடங்கி ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது : தமிழிசை குற்றச்சாட்டு திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டாஸ்மாக் ஊழல் பத்து ரூபாயில் ஆரம்பித்து இன்று ஆயிரம் கோடியை தாண்டி ஒரு லட்சம் கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக் ஊழல் ஆயிரம் கோடி என அமலாக்கத்துறை சொல்வதற்கு முன்னால் அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என செந்தில் பாலாஜி கேட்கிறார். உண்மை என்னவென்றால் ஊருக்கே தெரிந்த ஒன்று. சமீபத்தில் டாஸ்மாக் பார் சங்கத்தினர் ஒரு கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் கரூர் பார்ட்டினர் கராராக கமிஷன் கேட்பதாக தெரிவித்திருந்தனர். மதுபான ஊழல் தொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டு அதன் அடிப்படையில் தான் புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார் இந்தி மொழி பிரச்சனையை மறைப்பதற்கு டாஸ்மாக் ஊழலை பாஜக வெளியேகொண்டு வருகிறது என்று. ஆனால் நாங்கள் சொல்கிறோம் டாஸ்மாக் ஊழல் பிரச்சனையை மறைப்பதற்கு இந்தி மொழி பிரச்சனையை திமுக வெளியே கொண்டு வருகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கை செந்தில் பாலாஜி மீது தொடுத்தது தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். அதற்கு செந்தில் பாலாஜி என்ன பதில் சொல்லப் போகிறார். மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொண்டால் அனைவரும் கண்டிப்பாக இந்திய தான் படிப்பார்கள் என திமுகவினர் கூறுகின்றனர். குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்கள் இந்தி மொழி பேசும் மாநிலங்கள் என்பதால் அவர்கள் இந்தியை படித்தார்கள். ஆனால் தமிழர்கள் தங்களை சுற்றியுள்ள மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த மொழிகளை தான் படிப்பார்கள். தமிழக பட்ஜெட் முழுக்க முழுக்க காப்பி அடிக்கப்பட்ட பட்ஜெட். பெண்களுக்கான விடுதி கட்டுவது முதல் அனைத்து திட்டங்களும் பாஜக அரசின் திட்டங்கள் தான். அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு மாதம் 2000 என்பது பிரத மந்திரி திட்டமாகும். மொத்தத்தில் தமிழக பட்ஜெட் ஒரு வெற்று பட்ஜெட். சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மையினருக்கும் இது எந்த அறிவிப்பையும் கொடுக்காத பட்ஜெட். வரியில் இருந்து பெறும் நிதியை தமிழகத்திற்கு குறைவாக கொடுப்பதாக திமுகவினர் சொல்வது தவறு. உண்மையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட நிதியை விட தற்போது அதிக நிதி கொடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
Next Story



