மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.06 வீதம் லட்சம் ரு.2.12 லட்சம் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.06 வீதம் லட்சம் ரு.2.12 லட்சம் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (17.03.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.06 லட்சம் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 418 மனுக்கள் பெறப்பட்டது. மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியினை பெற்ற மாற்றுத்திறனாளியின் பெற்றோர் தெரிவித்ததாவது: எனது மகன் பெயர் சிவக்குமார். கீழமாத்தூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவன் பள்ளிக்கு சென்று வருவதற்கும், தனது சுய தேவைகளுக்கும் மிக சிரமப்பட்டு வந்ததால் அவனுக்கு மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி வேண்டி மனு கொடுத்திருந்தேன். மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் இருந்து எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து உங்களது மகனுக்கு மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளதால் மாவட்ட ஆட்சியரத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது. அதேபோல எனது மகனுக்கு இன்று மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. எங்களைப் போன்ற எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளின் மனக்கவலை போக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியினை பெற்ற மாற்றுத்திறனாளியின் பெற்றோர் திரு.வெங்கடேஷ் என்பவர் தெரிவித்ததாவது: எனது பெயர் வெங்கடேஷ். பழைய விராலிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது மகன் பெயர் வெற்றிவேல். எனது மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவன் தினமும் பள்ளிக்குச் சென்று வருவதற்கு ஏதுவாக சக்கர நாற்காலி வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுத்து இருந்தேன். எனது மனுவை விசாரித்து எனக்கு இன்று மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. எனது மகனும் எந்த சிரமமும் இன்றி பள்ளி சென்று வருவான். இதனால் அவன் மிக மகிழ்ச்சியாக உள்ளான். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) திரு.சு.சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுரேஷ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.சுந்தரராமன், தாட்கோ மேலாளர் திரு.கவியரசு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story