பரமத்தி வேலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர் கைது.

X

பரமத்தி வேலூர் காவிரி ஆறு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர் கைது.
பரமத்திவேலூர், மார்ச்.17: பரமத்தி வேலூர் காவிரி ஆறு குட்டுக்காடு ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக வேலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வேலூர் காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவலர்கள் அப் பகுதியில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் வேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பசுபதி (24) என்பதும் தெரியவந்தது. மேலும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பசுபதிக்கு போதை மாத்திரைகளை விற்பனைக்கு கொடுத்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தும் இளைஞர்களிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பசுபதி மீது வேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பசுபதிக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (22) என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story