சூலூர்: கைப்பையுடன் கஞ்சா விற்ற ஆசாமி கைது !

X
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று சூலூர் பிரிவு, குரும்பபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கையில் பையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் போலீசாரைக் கண்டதும் பதற்றமடைந்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில், அப்பையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கஞ்சாவை வைத்திருந்தவர் திருப்பூர் மாவட்டம், வலையங்காடு, சண்முகா நகரைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 56) என்பது தெரியவந்தது. கூலித் தொழிலாளியான அவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அழகர்சாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

