இன்று உலக சிட்டுக்குருவி தினம்

சிட்டுக்குருவிகள் பாதுகாக்க பறவைகள் இன ஆர்வலர்கள் கோரிக்கை
அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை காப்பாற்ற உலக சிட்டுக் குருவிகள் தினத்தில் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும் என்று பறவைகள் இன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பறவைகள் காடுகளையும் மனிதர்களையும் காக்கும் தேவதைகள் இந்த பறவைகளை போற்றும் வகையில் அழிவின் பிடியில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க 2010ஆம் ஆண்டு முதல் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சிட்டுக்குருவிகளை அழிவின் பிடியில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று பறவைகள் இன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிட்டுக்குருவிகள் சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் உயிர் வாழும் ஆனால் தற்போது 3 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழ முடிகிறது. இதற்கு காரணம் செல்போன் கோபுரங்கள் மற்றும் விளை நிலங்களில் ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்படுத்துதலும், கூரை வீடுகளில் குடியிருந்த இந்த பறவைகள் மக்கள் காங்கிரீட் வீடுகளுக்கு மாறியபோது வாழ்விடங்களை தொலைத்ததும், இவை அழிவின் விழிம்பிற்கு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பறவைகள் இன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய சிட்டுக் குருவிகள், தான் உண்ணும் தானியங்கள்,பழங்களை எச்சங்களாக பல்வேறு பகுதிகளில் இறைத்து விட்டு செல்லும் போது அங்கே மரங்களும்,சோலைகளும், வனங்களும் உற்பத்தியாகின்றன. இதன் மூலம் இயற்கை காப்பாற்றப்படுவதோடு மரங்கள் அதிகம் வளர்ந்தால் தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கிறது என்பதை இப்போதுள்ள மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் தெரிவிக்கவேண்டும், பறவைகளை கடும் வெயில் காலத்தில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் மற்றும் உணவு தானியங்களைப் பறவைகளுக்கு அளிக்க வேண்டும்,மனிதன் வாழ்வதற்கு பறவைகள் எவ்வளவு முக்கியம் என்பதை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும், பறவைகள் இல்லை என்றால் உலகில் மனிதர்கள் யாரும் வாழ முடியாது இயற்கையின் சமநிலையும் மாறிவிடும், இதனால் பேராபத்துகள் ஏற்படும் . பறவைகளை பாதுகாத்தால் மட்டுமே இந்த உலகை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற ஒற்றை வார்த்தையை உலக சிட்டுக்குருவிகள் தினத்தில் சூழுரைக்க வேண்டும் என்பதே பறவைகள் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story