விவசாயிகள் கவலை

X
ஈரோடு மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கத்தால் மாவட்டத்தில் பட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.இது குறித்து தமிழ்நாடு பட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜகோபால் கூறியதாவது:-ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் வரை பட்டுப்புழு உற்பத்தி ஆகிறது. பிற மாவட்டங்களை விட ஈரோடு மாவட்ட பட்டுக்கூடு தரமானவை. இதனால் கூடுதல் விலை கிடைக்கிறது. தற்போது மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் உள்ளதால் பட்டுப்புழுக்கள் வெப்பத்தை தாங்கி வளர முடியவில்லை. மல்பெரி செடிகளுக்கும் போதிய தண்ணீர் வழங்கினாலும், இலை காய்ந்து விடுகிறது. இதனால் பட்டுப்புழுக்கள் தேவையான மல்பெரி இலையை உண்ணாமல் இறக்கின்றன.உற்பத்தியாகும் பட்டுக்கூடு (கக்கூன்) அவிந்தது போல மாறுவதால் தரம் குறைந்து கழிவாகிறது. இதனால் உற்பத்தி 40 சதவீதம் வரை குறைகிறது. தற்போது தர்மபுரியில் ஒரு கிலோ பட்டுக்கூடு 250 முதல் 780 ரூபாய்க்கு விலை போகிறது. ஆனால் 40 சதவீத விளைச்சல் இல்லாததால் பட்டுக் கூடுக்கு நல்ல விலை இருந்தும் விவசாயிக்கு லாபம் இல்லாத நிலையே நீடிக்கிறது. வரும் ஜூன் மாத இறுதிவரை வெயில் வாட்டும் என்பதால், பட்டு உற்பத்தி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Next Story

