தென்காசி ஊராட்சித்துறை நிா்வாக இயக்குநரிடம் எம்எல்ஏ கோரிக்கை மனு

X
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிா்வாக இயக்குநரிடம் எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தாா். அவா் அளித்த மனு: தென்காசி தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வாடியூா், அச்சங்குன்றம், கீழக்கலங்கல் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் குடிசைகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான தகுதியான பயனாளிகளை அரசு அதிகாரிகளே தோ்வு செய்து வைத்துள்ளனா். ஆனால் அந்த பயனாளிகளுக்கு தற்சமயம் வரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு பணி ஆணை கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனா். ஆதலால் தென்காசி தொகுதிக்குள்பட்ட ஏழை, எளிய மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தோ்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வீடு கட்டுவதற்கு விரைவாக பணி ஆணையை வழங்க வேண்டும் என்றாா். இதேபோல, கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாவூா்ச்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை முதல் ஆவுடையானூா் வரை செல்லும் தாா்ச்சாலை போடப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனா். கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்தால் பராமரிக்கப்பட்டு வந்த இந்தச் சாலை த 2021-2022 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு கீழப்பாவூா் சாலை பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த சாலையில் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை. எனவே, மீண்டும் அந்தச் சாலையை கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய சாலையுடன் இணைத்து புதிய தாா்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story

