வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை சாகுபடி பற்றிய தொழில்நுட்ப பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், புதனன்று பட்டியலின விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான தென்னை சாகுபடி பற்றிய ஒரு நாள் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்றது. அகில இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் (மலைப்பயிர்கள்) 2024-25-ஆம் ஆண்டிற்கான பட்டியலின துணை திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சியில், இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கை.குமணன் தலைமை வகித்து தொடங்கி வைத்து, தென்னை சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் தென்னை ரகங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டி.ஏ.கண்ணன் பங்கேற்று, தென்னந்தோப்புகளில் கால்நடை வளர்ப்பு, அதில் லாபமீட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மேலும், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மற்றும் உர நிர்வாகம் பற்றிய தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டது. தென்னையில் வரும் தஞ்சை வாடல் நோய் தடுப்பிற்கு வேர்மூலம் மருந்து செலுத்தும் முறை, தென்னை டானிக் மற்றும் எதிர் உயிரி கலவைகள் பயன்படுத்துவது பற்றிய செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று தென்னை சாகுபடி தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டனர்.
Next Story



