கள்ளக்காதல் தம்பதிக்கு ஆயுள் தண்டனை

X
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேவுள்ள சேதம்பால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாத்தாள்(40). இவருக்கும் மேலாயூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கண்ணாத்தாள் தனது தாய் வீட்டிற்கே திரும்ப வந்துள்ளார். அங்கு அவரது தாய்மாமன் மகனான கார்த்திக்ராஜா(48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதில் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு முனீஸ்வரி என பெயரிட்டுள்ளனர். அந்த பெண்குழந்தை பிறந்த பிறகு கார்த்திக்ராஜா, கண்ணாத்தாளுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இது குறித்து கண்ணாத்தாள், கார்த்திக்ராஜாவிடம் பேசியபோது கார்த்திக்ராஜா தனக்கு பெண் குழந்தை பிடிக்காது என கூறியுள்ளார். இதனை அடுத்து கார்த்திக்ராஜாவுடனான தொடர்பை துண்டிக்க விரும்பாத கண்ணாத்தாள் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார் . கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அருகில் உள்ள சானாரேந்தல் கிராமத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தொட்டிக்குள் தனது பெண் குழந்தையை முழ்கவைத்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து இளையான்குடி போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை செய்து வந்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட கண்ணாத்தாள் மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்
Next Story

