பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த ஏர்வைக்காடு பகுதியில் இருந்து, திருக்குவளை வழியாக நாகை மற்றும் திருவாரூர் பகுதிக்கு நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால் மதியம் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பேருந்து வசதி இல்லாமல் அவதிக்கு ஆளாகி வந்தனர். மாணவர்கள் மட்டுமின்றி, முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆகவே, மதியம் வேளையிலும் பேருந்து இயக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், நாகையிலிருந்து திருக்குவளை வரை செல்லும் பேருந்து, ஏர்வைக்காடு கிராமம் வரை நீட்டித்து நேற்று முதல் இயக்கப்படுகிறது அதன்படி, நேற்று ஏர்வைகாடு பகுதிக்கு வந்த அரசு பேருந்துக்கு, சமூக ஆர்வலர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து திலகமிட்டு ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து, பேருந்துக்கு பூசணிக்காய் கொண்டு திருஷ்டி எடுத்து வழி அனுப்பி வைத்தனர். மேலும், இப்பகுதியில் பேருந்து நிழலகம் ஒன்று அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



