வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில்

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில்
X
மான்களின் உறைவிடத்தில் மஞ்சம்புற்களால் மேற்கூரை
சேலம் கோரிமேடு அருகே உள்ள குரும்பப்பட்டியில் வனத்துறை சார்பில் 78 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு புள்ளிமான், கடமான், நரி, குரங்கு, முதலை, ஆமை, மயில், மலைப்பாம்பு, வெளிநாட்டு நீர் பறவைகள் உள்பட 22 வகையான உயிரினங்கள் 200-க்கும் கூடுதலான எண்ணிக்கையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்கா வளாகத்தில் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை அருவி, விலங்குகளின் தத்ரூபமான உருவம் பொறிக்கப்பட்ட கல்தூண்கள் என பார்வையாளர்களை கவரும் வகையில் இடங்கள் உள்ளன. ஏற்காட்டையொட்டி உயிரியல் பூங்கா அமைந்துள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 100 டிகிரியை தாண்டி வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் விலங்குகளும் வெயிலின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் விலங்குகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பறவைகளுக்கு மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பனித்துளி போல் நீர் விழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலை, ஆமைகளுக்கு நீந்தி செல்லும் வகையில் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரும் அடிக்கடி மாற்றப்படுகிறது. பூங்காவில் 36 கடமான்களும், 65 புள்ளி மான்களும் உள்ளன. மான்களுக்கும் மதிய வேளைகளில் ஷவர் மூலம் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு மான்களின் உறைவிடங்களான கூடாரங்கள் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அதை நீக்கிவிட்டு குளிர்ச்சியூட்டும் புற்களான மஞ்சம்புற்களால் மேற்கூரை வேயப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் சின்னசேலத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story