குழந்தைகள் இலக்கியத்; திருவிழா” மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்(சாகித்திய அகாடமி விருதாளர்) எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார்.

X
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் இலக்கியத்; திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்(சாகித்திய அகாடமி விருதாளர்) எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்(சாகித்திய அகாடமி விருதாளர்) அவர்கள் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கியக் கழகம் இணைந்து குழந்தைகள் இலக்கிய திருவிழாவை நடத்துவதில் உண்மையிலேயே ஒரு பெருமையான செயல். ஒரு மிக முக்கியமான செயல். அந்த செயலுக்காக எனது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். குழந்தைகள் இலக்கியத்தை பற்றி பேசுவது, குழந்தைகள் இலக்கியத்தினுடைய தேவைகளை பற்றி நாம் உரையாடல் தொடர்ந்து நிகழ்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கின்ற நவீன ஆய்வுகள், குறிப்பாக மானுடவியல் ஆய்வுகள் தொடங்கி, மனோ தத்துவவியல் ஆய்வுகள் வரை சொல்லுகிற மிக முக்கியமான உண்மை, ஒரு மனிதனுடைய நீண்ட வாழ்வு ஒரு 90 ஆண்டு, 80 ஆண்டுகால நீண்ட வாழ்வில், எது மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது அல்லது அந்த வாழ்விற்கு எந்த பகுதி அடிப்படையாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினால், எப்படி ஒரு கரிசல் நிலம் அல்லது செம்மண் நிலம் அல்லது வயல்வெளி அல்லது கரம்பை மண் பகுதி என்று ஒவ்வொரு நிலப்பகுதியிலும், ஒவ்வொரு வகையான செடி, கொடிகள், தாவரங்கள், பயிர்கள் விளையும். அதேபோலத்தான் குழந்தை பருவம் என்பது அந்த பருவத்தில் ஒரு மனிதனுடைய மனநிலை, குழந்தையினுடைய மனதிலே உருவாகின்ற சித்திரம், கனவுகள் தாக்கங்கள், இவையெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது என்று சொல்கிறார்கள். எனவே தான் குழந்தைப் பருவத்தில் சிறுவர்களாக இருக்கின்ற பொழுது படிக்கின்ற புத்தகம், பார்க்கின்ற நண்பர்கள், பழகுகின்ற நண்பர்கள், பார்க்கின்ற மனிதர்கள், அந்த காலத்தில் அவர்களுக்கு உருவாகிற கதாநாயக பிம்பங்கள் இவையெல்லாம் மிக மிக முக்கியமானது. அந்த வகையில் தான் குழந்தை இலக்கியம் என்பது மொத்த மானுடவியல்; வாழ்விற்கு மிக அடிப்படையான இலக்கியமாக இருக்கிறது. குழந்தை இலக்கியங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக சமூகத்தில் நல்ல விளைவுகளை உருவாக்குவதற்கான முயற்சி நடக்கிறது என்று அர்த்தம். நமது ஊர்களில் சிறார்களுக்காக மட்டுமே இருக்கின்ற நூலகங்கள் என்று பார்த்தால் மிகக் குறைவு. சிறுவர்களுக்கான புத்தகங்கள் என்று பார்த்தால் அதைவிட குறைவு. அது சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற விழிப்புணர்ச்சியில் இருந்து மிக அதிகமாக அது வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரிய இலக்கியங்களை படைத்து விடலாம். சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்கின்ற பொழுதுதான் அதனுடைய கடினம் தெரியும். நான் 2011-12 ஆம் ஆண்டு காவல் கோட்டம் எழுதி முடித்த பிறகு, அன்றைக்கு தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குகின்ற பொழுது, ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு பெரியாரைப் பற்றி பாடம் எழுதுகின்ற பணியில் என்னை ஈடுபடுத்தினார்கள். ஏழாம் வகுப்பு குழந்தையினுடைய, அவர்களுக்கு புழக்கமான சொல், அவர்களுக்கு படிப்பதை போன்று ஒரு சிறிய வாக்கிய அமைப்பில் பெரியாரைப் பற்றி இரண்டு பக்கம் ஒரு பாடத்தை எழுதுவதற்கு நான் பட்டப்பாடு சொல்ல முடியாதது. 1000 பக்கம் காவல் கோட்டம் எழுதியதற்கு பின்பு தான் இங்கே வந்தேன். என் குழந்தை அப்பொழுது சரியாக ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் ஒரு பக்கத்தை நான் எழுதிவிட்டு படித்துப் பார் என்று சொல்லுவேன். எனக்கு புரியவில்லை என்று சொல்லுவாள்;. ஏறக்குறைய 10 முறை என்னை என் மகள் திருத்தி இருக்கிறார். எனக்கு புரிகின்ற மாதிரி, புரிகிற வாக்கியத்தில் எழுதுங்கள் என்று சொல்லுவாள். குழந்தைகளுக்கு புரிகிற சொற்களில் அவர்களின் உலகத்திற்குள் போவது என்பது, அவர்களின் வார்த்தைகளின்; வழியே அவர்களது மனக்கதவை திறந்து உள்ளே போவது. அது மிக மிக சவாலானது. இன்றைக்கு குழந்தை இலக்கியத்தை எழுதுகின்ற இவ்வளவு எழுத்தாளர்கள் உருவாகி இருப்பதும், அவர்களையெல்லாம் அறிமுகப்படுத்துவதும் மிக மிக முக்கியமான பணி. நீங்கள் யோசித்துப் பாருங்கள், நாம் சிறுவயதில் படித்த புத்தகம், இதிகாசங்கள், இலக்கியங்கள், கதாநாயக பிம்பங்கள், அது ஏற்படுத்திய அறச்செயல்கள் இதுதான் மீண்டும் மீண்டும் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறது. வற்றாத ஊற்றான நம் கற்பனைக்கு அடி உரம் தான், மீண்டும் மீண்டும் உயிர் சக்தியை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் குழந்தை இலக்கியம் மிகப் பெரிய அளவிற்கு கொண்டாட வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஏதாவது ஒரு நான்கு புத்தகங்களை நாம் கொடுத்தே ஆக வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி குழந்தைகள் பேச வேண்டும். அப்படி ஒரு சூழல், அப்படி ஒரு குடும்ப சூழல், சமூக சூழல், கல்வி சூழல் உருவாக வேண்டும். அவை அனைத்திற்கும் மிக மிக முக்கியமாக இந்த குழந்தை இலக்கிய திருவிழா அமையும் என்று நான் நினைக்கின்றேன். இந்த நல்ல முயற்சியில் ஈடுபடுகின்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கரிசல் இலக்கிய கழகத்தினுடைய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார். இந்த இரண்டு நாட்கள்(20.03.2025 மற்றும் 21.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில்; சிறுவர்களுக்கான கதைகள், பொம்மலாட்டம், மன நல பயற்சிகள், சிறுவர் திரைப்படங்கள், மேஜிக், போன்ற நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுவிவாதம், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம், கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் போன்ற பல்வேறு அமர்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றன. இந்த குழந்தைகள் இலக்கியத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில், எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள் சிறப்புரையாற்றியனார். குழந்தைகளுக்காக நடைபெற்ற கதை சொல்லுதல் நிகழ்ச்சியில், கதையாசிரியர் திரு.நீதிமணி அவர்கள் மற்றும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் கதையாசிரியர், கதைச்சொல்லி) ஆகியோரும், பொம்மலாட்டம் நிகழ்ச்சியில் பொம்மலாட்டக் கலைஞர், கதைச்சொல்லி திருமதி ரதி அவர்களும், சுடுமண் சிற்பங்கள் மற்றும் மண்பாண்டங்கள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் திரு.வீரராஜ் அவர்களும் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும், ஆசிரியர்கள் ஃ பெற்றோர்களுக்காக அமைக்கப்பட்ட அரங்கில் மனநல மருத்துவர், பேராசிரியர் துணைத்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை மரு.சிவபாலன் அவர்கள் மற்றும் மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளர் மரு.மந்திரிகுமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட குழுவிவாத நிகழ்ச்சியும், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம் என்ற தலைப்பில் சாகித்ய பால புரஸ்கார் விருதாளர், பள்ளிக் கல்வித்துறையின் சிறார் ஆசிரியர் இதழின் பொறுப்பாசிரியர் திரு.பாலபாரதி அவர்களின் சிறப்புரையும், கலகல வகுப்பறை என்ற தலைப்பில் திரு.ரெ.சிவா அவர்களின் சிறப்புரையும், மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் அமர்வில் சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்கள் மற்றும் எழுத்தாளர் திரு.ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆகியோரின் சிறப்புரையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இரண்டாம் நாளில் குழந்தைகளுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.க.சரவணன் அவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்(அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்) முனைவர் வே.சங்கர்ராம் அவர்கள்; ஆகியோரின் கதை சொல்லுதல் நிகழ்ச்சியும், நாடகக் கலைஞர், ஆவணப்படத் தயாரிப்பாளர், திரு.வெங்கடசுப்ரமணியம் அவர்களின் நாடகப்பட்டறை நிகழ்ச்சியும், மேலும், ஆசிரியர்கள் / பெற்றோர்களுக்காக அமைக்கப்பட்ட அரங்கில் குழந்தைகளுக்கான உரிமைகள் என்ற தலைப்பில், இயக்குநர், தோழமை, சென்னை திரு.அ.தேவநேயன் அவர்கள், இயக்குநர்(குழந்தைகள் உரிமை மற்றும் மேம்பாட்டு மையம்) திருமதி ஸ்டெகானா ஜென்ஸி அவர்கள் மற்றும் இயக்குநர்(வளர்ச்சி, கல்வி மற்றும் செயல்பாடுக்கான நிறுவனம்) திரு.ம.ஆண்ரூ ஜேசுராஜ் அவர்கள் ஆகியோரின் சிறப்புரைகளும், குழந்தை ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில், பொது நல மருத்துவர், மருத்துவ எழுத்தாளர், தேசிய அறிவியில் விருது பெற்றவர், இராஜபாளையம் மரு.கு.கணேசன் அவர்கள் மற்றும் குழந்தைகள் மன நல மருத்துவர் மரு.விது.பிரபா அவர்கள் ஆகியோரின் சிறப்புரைகளும், இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், டாக்டர் சங்கர சரவணன் அவர்களின் வினாடி வினா நிகழ்ச்சியும், தயா அவர்களின் மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Next Story

