ரவுடி ஜான் கொலை எதிரொலி

X
சேலம் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியா (வயது 55). பிரபல ரவுடியான இவர் கடந்த 26-ந் தேதி தனது மனைவியுடன் காரில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை ஒரு கும்பல் வழிமறித்து ஜானை வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவக்குமார், பெரியசாமி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜீவகன், சலீம் ஆகியோர் ஈரோடு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் இந்த கொலை கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி செல்லத்துரை கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்தது தெரியவந்தது. மேலும் கொலையான ஜான் மீது கொலை வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்துள்ளதால் கிச்சிப்பாளையம் பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் ரவுடிகளின் பட்டியலையும் உளவுப்பிரிவு போலீசார் மூலம் மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கிச்சிப்பாளையத்தில் ரவுடிகள் சிலர் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Next Story

