டாஸ்மாக் விற்பனையில் ஊழல்களை கண்டித்து, பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டும் நிகழ்வு..

டாஸ்மாக் விற்பனையில் ஊழல்களை கண்டித்து, பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டும் நிகழ்வு..
X
டாஸ்மாக் விற்பனையில் ஊழல்களை கண்டித்து, பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டும் நிகழ்வு..
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை கண்டித்து, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும், மாநிலத் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கருப்பு கொடி காட்டும் நிகழ்வு (22.03.2025) நடைபெற்றது. அதன்படி, நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் டாக்டர் கே பி ராமலிங்கம் தமது வீட்டின் முன்பு, கருப்பு சட்டை அணிந்து, திமுக அரசின் டாஸ்மாக் ஊழலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏந்தி டாஸ்மாக் ஊழல் குறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டு வரும் திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், ஊழலற்ற மதுபானங்கள் விற்பனையை செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. குடிநீரை கோட்டை விட்டார்! குடிகாரர் ஆக்கிவிட்டார்!! என்றும் கோஷம் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர், இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் தமிழகத்தில்தான் நடைபெற்றுள்ளது. நாடு சுதந்திரமடைந்து பல்வேறு மாநிலங்கள், பல்வேறு ஆட்சிகள் நடைபெற்றிருந்தாலும், டாஸ்மாக் போன்ற இவ்வளவு பெரிய வரலாற்று ஊழல் சாதனையை திமுக அரசு செய்து முடித்து இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றரை ஆண்டுகளில், அவர் நிறைவேற்றியுள்ள சேவையை விட செய்திருக்கிற ஊழல்கள்தான் அதிகம் என்று கூறும் அளவிற்கு அவரது ஆட்சி சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மறைப்பதற்காகத்தான், மத்திய அரசுக்கு எதிராக போர் தொடுப்பதாகக் கூறிக்கொண்டு, மும்மொழிக் கல்விக் கொள்கை, மத்திய அரசு எதுவும் கூறாத நிலையிலும் தொகுதி மறுசீரமைப்புக்கான அனைத்துக் கட்சி கூட்டங்கள், என்று பம்மாத்து நாடகங்களை முதலமைச்சர் அரங்கேற்றி வருகிறார். தமிழகத்தில் டாஸ்மாக்கில் மதுபான விற்பனை செய்யும்போது, அரசு வரிவிதிப்பு 60 சதவீதம்போக, மீதி 40% முறைகேடாக மது விற்பனை நடைபெறுகிறது. போலி மற்றும் வரியில்லாத மதுபானங்களை விற்பனை செய்கிறார்கள். சாராய ஆலை அதிபர்கள், அதிகாரிகள், அரசு நடத்துகிற கட்சி ஆகியவை முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என அமலாக்கத்துறை கண்டுபிடித்து கூறியுள்ளது. ஆனால், உண்மையிலேயே ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் பல்வேறு போராட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. முதலில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது காவல்துறையை வைத்து தடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலகங்கள் கடைகள் முன்பு, போதை ஆட்சி நடத்தும் திமுக முதலமைச்சரின் படங்களை ஒட்டிவைத்து, பாஜக மகளிர் அணியினர் எதிர்ப்புகளை தெரிவித்தோம். மாநில அரசு திட்டம் என்பதால் முதலமைச்சரின் படத்தை வைத்து மதுபான கடையில் எதிர்ப்பை தெரிவித்தோம். தன்னைத்தானே அப்பா என்று அழைத்துக் கொள்ளும் ஸ்டாலினப் பார்த்து, மதுபான ஊழல் குறித்து உண்மை நிலையை கூற வேண்டும் என எல்லோரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுபான ஆலைகளை மூட வேண்டும், மதுபான கடைகளை மூட வேண்டும் என்று கூறுவதைவிட, உண்மையான விலையில் மதுவை விற்பனை செய்ய வேண்டும். போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளையடிக்கும் திமுகவின் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு சரியான தீர்வு காணும் வரை, ஆட்சிப் பொறுப்பில் இருந்து திமுக வெளியே வந்து நியாயஸ்தராக உண்மையாக / குற்றவாளி இல்லை என நிரூபித்துவிட்டு, இந்த ஆட்சியை தொடர வேண்டும். அதைவிடுத்து, டாஸ்மாக் மது பானத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது, வழக்கு தொடுப்பது கோழைத்தனம் ஆகும். உண்மையான நியாயவாதியாக இருந்தால் உண்மையை வெளியே செல்ல வேண்டும். அதைவிடுத்து கோழைத்தனமாக உண்மையை வெளியே கொண்டு வருபவர்களை முடக்க நினைத்தால் அது முடியாது. திமுக அரசின் அடக்குமுறை என்பது நெருப்பின்மீது போடுகின்ற ஒரு சாதாரண கந்தல் துணி ஆகும். கந்தல் துணிதான் எரிந்து போகுமே தவிர பாஜகவின் ஆவேசம், போராட்டம் அடங்காது. பாஜக மாநிலத் தலைவரின் வழிகாட்டுதலில், தொடர்ந்து இது போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். சிறைச்சாலைக்கு இவர்களை அனுப்பும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த K.P. இராமலிங்கம், ஆட்சி பொறுப்பில் ஒரு குற்றவாளி/ அராஜகவாதி/ அதிகார துஷ்பிரயோகம் செய்பவர் இருந்தால், இதுபோன்ற ரவுடியிசமும் கொலைகளும் திருட்டு சம்பவங்களும் தொடர்ந்து பயமின்றி ஈடுபட்டு வருவார்கள். ஆட்சியாளர்கள்மீது பயம் இருந்தால்தான்/ அவர்கள் நல்லவர்களாக இருந்தால்தான், மற்றவர்களும் பயப்படுவார்கள். ஆளுங்கட்சி, காவல்துறையை கையில் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் தகுதியற்ற முதலமைச்சர் ஆகிவிட்டார். காவல்துறையை நிர்வகிக்க தகுதியற்றவர். முதலமைச்சராக இருப்பதற்கு அருகதை அற்றவர். அதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்று சட்டசபையில் முழக்கமிட்டுவிட்டு, பின்னர் முடங்கி கிடக்கிறார். அவர், குற்றச் சம்பவங்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டபோது, வெளிநடப்பு செய்கிறார்கள். தூத்துக்குடி சம்பவம், வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி விட்டு, திமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளுக்கு பதில் கூறுவதற்கு அருகதை அற்றவராக உள்ளார். ஒரு யோக்கியதைற்ற முதலமைச்சர் இன்றைய பொறுப்பில் உள்ளார். அதனால்தான் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. எனவே இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். எவ்வளவு சீக்கிரமாக திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறியப்படுகிறதோ அவ்வளவு காலத்திற்குள் இந்த சட்டம் ஒழுங்கை சரிபடுத்த முடியும். இவர்கள் தொடர்வார்களேயானால் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் குற்றச் சம்பவங்கள் மேலும் மேலும் அதிகரிக்க முதலமைச்சர் வாய்ப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை, பல்கலைக்கழக மாணவி, சிறுமிகள் கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியவில்லை. கல்வி நிறுவனங்கலைச் சுற்றிலும் போதை மருந்துகள் போதை கலாச்சாரத்தின் உச்சத்தில் தமிழகம் உள்ளது. போலி சாராய சாவு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவங்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டு, புதிய புதிய பிரச்சனைகளை திமுக கையில் எடுத்துக் கொள்கிறது. திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற செயலை மறைப்பதற்காகத்தான் மத்திய பாஜக அரசின்மீது இல்லாத பல்வேறு குற்றச்சாட்டுகளை சாட்டி, அதற்காக பல போராட்டங்களை திமுக நடத்தி வருகிறது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடைகளை மாற்றி அணிந்து கொண்டு வந்து, நாடாளுமன்றத்திற்கு முன்பாக கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அந்த கட்சியின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்திற்கு முன்பு கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், ஆட்சியில் இருந்து திமுக ஒழிய வேண்டும்., அகற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நிம்மதியான ஆட்சியை / நடைமுறையை/ சட்டம் ஒழுங்கை இந்த நாட்டு மக்கள் பார்க்க முடியும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கே பி ராமலிங்கம், மத்திய அரசு மறுசீரமைப்பு தொடர்பான முழு விவரங்களை அறிவிவதற்கு முன்பாகவே இதைப் பற்றி பேசுவது நாடகம் ஆடுவது அனைத்தும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கெட்டுக் கிடப்பது டாஸ்மாக் ஊழல் வெளியே வருகிறது, பெற்றோர்கள் ஆதரிக்கும் முன்மொழி கொள்கைக்கு மாறாக செயல்படுவது கருத்து தெரிவிப்பது, மாற்றுக் கருத்துக்களையும் மாற்று எண்ணங்களையும் திணித்து, திறனற்ற செயல்பாடுகளை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் எடுத்த முதல் ஆயுதம் மும்மொழிக் கொள்கை போராட்டம் ஆகும். ஆனால் பாஜக நடத்திய மும்மொழிக் கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கத்திற்கு தான் ஆதரவு அதிகரித்தது என்பதை அறிந்து கொண்டு, அதைவிடுத்து, அடுத்ததாக, தொகுதி மறு சீரமைப்பை கையில் எடுத்துக் கொண்டு அலைகிறார்கள். நேற்று முன்தினம் கூட, மத்திய கல்வி அமைச்சர் மிகத் தெளிவாக மும்மொழி கொள்கையின் நன்மைகள் குறித்து தெளிவுபடுத்தி விட்டார். புதிய தேசிய கல்விக் கொள்கையில், கட்டாயம் 5-ம் வகுப்பு வரை அந்தந்த மாநிலங்களில் மாநில மொழியை பாட மொழியாக கற்பிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்ததாக இணைப்பு மொழி ஆங்கிலம், அதற்கு அடுத்து விருப்ப மொழி இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை படிக்கலாம். எனவே இதில் இந்தி திணிப்பு என்பது கிடையாது. இதை அனைவரும் புரிந்து கொண்டார்கள் என்பதால் இதை விடுத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையை கையில் திமுக எடுத்துள்ளது. தமிழகத்திற்கான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பற்றி எவ்வித அறிவிப்பும் வராத நிலையில், தமிழகத்தை சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன கிழிக்கிறார்கள்? என்ன சேவை செய்கிறார்கள்? மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு குறித்து எந்த விதமான முடிவு எடுக்காத நிலையில், பிரதிநிதித்துவம் குறைவதாக கூறுவதில் நியாயம் இல்லை. எதற்காக பிரதிநிதித்துவம் கேட்கிறார்கள்? 2ஜி ஊழல் செய்ய பிரதிநிதித்துவமா? டாஸ்மாக் ஊழல் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பிரதிநிதித்துவமா? எம்பிகளின் எண்ணிக்கை காட்டி பேரம் பேசுவதற்காக பிரதிநிதித்துவம் வேண்டுமா? திமுகவுக்கு எதற்கு வேண்டும்? திமுகவிற்கு இதற்கான அருகதை இல்லை. திருடுவதற்காக, குடும்பம் கொள்ளையடிப்பதற்காக அல்லது மகன் அமைச்சராவதற்காகவா பேரனை அடுத்ததற்கு முடிசூட்டுவதற்காகவா எதற்காக வேண்டும். நாட்டிற்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும். எதிர்க்கட்சி உள்ள பிற மாநில முதல்வர்களை முதல்வர் ஸ்டாலின் அழைத்து கூட்டம் நடத்துவது பம்மாத்து வேலையாகும். திமுகவின் ஊழலை மறைப்பதற்கு அவர்களை அழைக்கிறார்கள். அவர்களும் சேர்ந்து ஊழலுக்கு துணை போகிறார்கள். ஊழல் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் திசைமாற்றம் செய்வதற்காகவும் பிற மாநில எதிர்க்கட்சி முதல்வர்களை அழைத்து கூட்டம் கூட்டுகிறார். இவர்கள் செய்துள்ள டாஸ்மாக் ஐம்பதாயிரம் கோடி ஊழலை மறைப்பதற்காக, அதில் தப்புவதற்காக தான், பிறரை அழைக்கிறாரே தவிர, தொகுதி மறுசீரமைப்பு குறித்த உண்மையான நோக்கமில்லை என்றார். தாவெக தலைவர் விஜய், பாஜக நடத்துவது வெறும் நாடகப் போராட்டம் என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம், நாங்கள் நடத்துவது நாடகப் போராட்டம் என்றால் அவர் சினிமா போராட்டம் நடத்தட்டும். டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. சீமான் போன்றவர்கள் திமுகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என போராடுகிறார். பாஜக நடத்தும் போராட்டத்திற்கு அவர் ஆதரவு அளிக்க வேண்டும். யாரெல்லாம் திமுக ஆட்சிக்கு எதிராக களமாடுகிறார்களோ அவர்களெல்லாம் ஒருமித்து திமுக ஊழல் ஆட்சியை அகற்ற குரல் கொடுக்க வேண்டும். அழிந்து ஒழிக திமுக ஆட்சி என குரல் கொடுக்க வேண்டும். அகற்றுவோம் அகற்றுவோம் திமுக ஆட்சியை என குரல் கொடுக்க வேண்டும். இந்தக் குரல் எல்லோரிடமிருந்து வரவேண்டும். சீமான், டாக்டர் ராமதாஸ், டாக்டர் கிருஷ்ணசாமி, தவெகா விஜய் போன்ற,, திமுக வேண்டாம் என கருதுகிற அத்தனை பேரும் திமுக ஆட்சி அழிந்தொழிக என்ற கோஷத்தை அனைவரும் அதிகம் ஒலிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களும் சேர்ந்து செயல்படுவார்கள். கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன, அதை வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என திமுக நினைக்கிறது. அவர்களின் இந்தக் கணக்கை தவறாக்கிட வேண்டும். யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதைத்தான் முதன்மை செயலாக எடுத்து செயல்பட வேண்டும் என்றும் இராசிபுரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்/ சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் டாக்டர் கே பி ராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது ராசிபுரம் நகர தலைவர் வேலு,பாஜக நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலர் உடன் இருந்தனர்.
Next Story