மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.77.78 கோடி மதிப்பீட்டில் 1,053 பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலமாக பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கலம், தழுதாழை, மலையாளப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (22.03.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புற வளர்ச்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்பணிகளின் முன்னேற்ற நிலை, தரம், திட்டப் பணிகள் திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பது குறித்து இன்று வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று பார்வையிட்டார். வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கலம் மற்றும் மலையாளப்பட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்னேற்ற நிலை மற்றும் தழுதாழை மற்றும் மலையாளப்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்னேற்ற நிலை குறித்தும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீட்டின் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து வெங்கலம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 18.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடில் அமைத்து 50,000 நாற்றங்கால் மரக்கன்றுகள் வளர்க்கும் வட்டார நர்சரி கார்டன் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்த்து ஊராட்சிகளுக்கு வழங்கி, மரமில்லாத பகுதிகளில் நட்டு வளர்த்தெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மலையாளப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 30.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம செயலகத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது கிராமப்புரங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளில் பொதுமக்களுக்கு நேரடியாக பயன்தருவதும், அதிகமான வேலைவாய்ப்பு வழங்குவதும், அத்தியாவசிய திட்டப்பணிகள் மேற்கொள்வதுமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளில் 2024-2025 ஆண்டில் நேரடி கொள்முதல் நிலையங்கள், கிராம செயலக கட்டிடம், குழந்தைகள் நல மையக்கட்டிடம், உள்ளிட்ட கட்டுமானப்பணிகளும், தனிநபர் மரக்கன்றுகள் வளர்த்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட தனிநபர் பணிகளும், வரத்து வாய்கால் தூர்வாருதல், புதிய குட்டைகள் அமைத்தல், ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட 1,053 பணிகள் மேற்கொள்ள ரூ.77.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை புரிந்த நபர்களிடம் மருத்துவர்களின் சேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பதிவு செய்யுமிடம், ஆய்வகம், மருந்தகம், ஊசி செலுத்தப்படும் இடம், உள் நோயாளிகள் பிரிவு, ஸ்கேன் அறைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிக்கப்டும் சிகிச்சை அறைகள் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை சிறந்த முறையில் வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வுகளின்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் நிர்மலா ஜோஸ்பின், உதவி செயற்பொறியாளர்கள் அசோக்குமார் (சாலைகள் மற்றும் பாலங்கள்), அகிலாண்டேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் மரு.பாரதிப்பிரியா, வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவிப்பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story





