சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் புதிய தேர்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் புதிய தேர்
X
முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு
சேலம் டவுனில் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவிலில் புதிதாக சுமார் ரூ.1 கோடி மதிப்பில் தேர் செய்யப்பட்டு வருகிறது. 14 அடி அகலம், 37 அடி உயரம் கொண்ட வகையில் இரவு, பகலாக தொழிலாளர்கள் தேரை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தேரோட்டம் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவிலில் தேரோட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்தும், விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக சிறப்பு நிர்வாக நடுவர் பாலாஜி, மனுதாரர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி, தாசில்தார் தாமோதரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உள்பட இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் எப்போது நடத்துவது? தேரை எந்தெந்த வழியில் இழுத்து செல்வது? தேர் செல்வதற்கான பாதையில் ஆக்கிரமிப்பு ஏதும் இருந்தால் அவற்றை அகற்றுவது? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தேர் செய்யும் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, தேர் செய்யும் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்து ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story