கோவை: காரில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

X
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சிங்காநல்லூர்-திருச்சி சாலையில் உழவர் சந்தை அருகே நள்ளிரவு 2 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்தனர். காரின் டிக்கி மற்றும் உட்பகுதியில் நீளமான துப்பாக்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பதும், அது பலூன்களை சுட பயன்படுத்தும் ஏர்கன் என்றும் கூறினார். எனினும், அவரது பதிலில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஏர்கன் துப்பாக்கியை கோவை ஆயுத தொழிற்சாலைக்கு அனுப்பி, அது எந்த வகை துப்பாக்கி என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது உண்மையிலேயே ஏர்கன் துப்பாக்கியா, பலூன்களை சுட மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா, அவர் நள்ளிரவில் ஏர்கன்னுடன் எங்கு சென்றார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சிங்காநல்லூரில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

