சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க தவறினால் அகில இந்திய அளவில் வணிகர்கள் போராட்டம்

சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க தவறினால் அகில இந்திய அளவில் வணிகர்கள் போராட்டம்
X
சேலத்தில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந் தேதி மதுராந்தகத்தில் வணிகர் மாநாடு நடைபெறுகிறது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கட்டிட வரி, குப்பை வரி, மின்சார கட்டணம் உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த மாநாட்டில் வணிகர்களின் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அமேசான் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளால் 20 சதவீதம் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் தங்களது கடைகளை மூடியுள்ளனர். மேலும், அவர்கள் கெட்டுப்போன பொருட்கள் மற்றும் உணவுகளை விற்பனை செய்து வருவது தொடர்பாக நாங்கள் ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். எனவே, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கார்ப்பரேட் கம்பெனிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும். வணிகர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உருவாக்க தவறினால் அகில இந்திய அளவில் வணிகர்கள் போராட்டத்தை நடத்தவும் தயாராக உள்ளோம். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தி போராட்ட தேதி அறிவிக்கப்படும். மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உயர்வு மட்டுமே உள்ளது. அதேபோல், தமிழக அரசின் பட்ஜெட்டில் வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பட்ஜெட் வியாபாரிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
Next Story