சேலத்தில் கார் மீது சிக்னல் கம்பம் விழுந்து விபத்து

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 35). ஆடிட்டர். இவரது மனைவி மோனிகா (30). இவர்கள் இருவரும் காரில் மேட்டுப்பாளையம் சென்று விட்டு நேற்று இரவு 9.30 மணியளவில் சேலம் சீரங்கப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே கார் வந்தபோது, அங்கிருந்த சிக்னல் மின்விளக்கு கம்பம் திடீரென கார் மீது விழுந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஹரிஷ் மற்றும் அவரது மனைவி மோனிகா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனை கவனித்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக சிக்னல் கம்பம் அடியில் சிக்கிக் கொண்ட காரையும், காருக்குள் இருந்த கணவன்-மனைவி இருவரையும் பத்திரமாக மீட்டனர். அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த சிக்னல் கம்பம் அப்புறப்படுத்தப்பட்டது. கார் மீது சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இரும்பு சிக்னல் கம்பத்தின் அடிப்பகுதியில் துருப்பிடித்து இருந்ததால் சாய்ந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story

