கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆட்சியர் அறிவுரை

X
சிவகங்கை மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படியும், தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். அதில், வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வழிமுறைகளாக நண்பகல் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும், தாகம் ஏற்படாமல் இருந்தாலும், உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடித்தல் வேண்டும், தேனீர், காப்பி, கார்பனேட்டட் குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்து ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜுஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தலாம். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். வெறும் வயிற்றில் அல்லது கனமாக உணவை உட்கொண்ட பிறகு வெளியே செல்ல வேண்டாம். ஜங்க் உணவுகள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருத்தல் வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மேலும், தேவை எனில் துணிகளை ஈரப்படுத்தி பயன்படுத்துதல் வேண்டும், வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும், குடியிருக்கும் வீட்டை திரை சீலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி குளிர்ச்சியாக பாரமரித்தல் வேண்டும், இரவில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடையினை பயன்படுத்துதல் வேண்டும், வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்த்தல் வேண்டும், குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு செல்லக்கூடாது, மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரசின் 100 நாட்கள் பணியின் போது போதிய குடிதண்ணீர் வழங்குவதை உறுதிசெய்திடல் வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள முதியவர்களுக்கான வழிமுறைகளாக தனியே வசிக்கும் முதியவர்கள் உடல் நிலையை தினமும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்கள் அருகாமையில் அவசர தேவைக்காக தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியே செல்வதை தவிர்க்கவும்,வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்கவைக்க வேண்டும், தாகம் இல்லாவிட்டாலும், போதிய இடைவெளிகளில் நீர் அருந்ததுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள கால்நடைகளுக்கான வழிமுறைகளாக கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், கால்நடைகளுக்கு போதிய நீர், தீவனம் இருப்பதை உறுதி செய்ய வேன்டும், கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். வீட்டில் வளர்க்கும் பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து நீர் கொடுக்க வேண்டும், செல்லப்பிராணிகளை வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. மேலும், பருவநிலை மாற்றங்களினால் இவ்வாண்டு கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, பயன்பாட்டில் உள்ள மின்கம்பி மற்றும் மின்சாதனங்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிசெய்துகொள்ள வேண்டும். மேலும், மாடி வீடுகளில் மேல் கூரைகளில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேற்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன், வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை இயன்றவரை அதிக அளவில் சேகரித்து வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆணவங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்னை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் எனவும், வெப்ப தாக்கத்தை மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story

