பழைய ஓய்வூதியத் திட்டம் கேட்டு, தஞ்சாவூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

X
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் . சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் எம்.ஆர்.பி. செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் இரா.ரமேஷ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் இ.சத்தியசீலன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ப.இளையராஜா, ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் சி.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தைத் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கைப் பணி மன்ற மாநிலத் தலைவர் பெ.அம்பேத்கர் தொடங்கி வைத்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் , அ.எழிலரசன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கப் பொதுச் செயலர் இரா. சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலர் ஆ.ரங்கசாமி நிறைவுரையாற்றினார். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் க. மதியழகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள், ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

