கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு.

ஆயுள் தண்டனை
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் சுந்தரபாண்டி என்பவரது தோட்டத்தில் முருகன் என்பவர் காவல் வேலை பார்த்து வந்துள்ளார். அந்தத் தோட்டத்தில் ஜெகதீஸ்வரன் என்ற இளைஞரும் வேலை பார்த்து வந்த நிலையில் தோட்டத்தில் தேங்காய்களை திருடி விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக முருகன் தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்ததால் ஜெகதீஸ்வரனை வேலையை விட்டு நிறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ்வரன் கடந்த 2022 ஆம் ஆண்டு தென்னந்தோப்பில் காவலுக்கு இருந்த முருகனை வெட்டி படுகொலை செய்துள்ளார். கொலைச் சம்பவம் குறித்து முருகனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் குரங்கணி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்று சாட்சியங்களின் அடிப்படையில் ஜெகதீஸ்வரன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளி ஜெகதீஸ்வரன் சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
Next Story