வேட்டையாட சென்றவர்களை வனத்துறையினர் பிடித்ததால் கிராம மக்கள் சாலை மறியல்

வேட்டையாட சென்றவர்களை வனத்துறையினர் பிடித்ததால் கிராம மக்கள் சாலை மறியல்
X
கோவில் திருவிழாவை முன்னிட்டு வேட்டையாட சென்றவர்களை வனத் துறையினர் பிடித்ததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் புலிவலத்தை அடுத்த பொன்னாங்கண்ணிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொன்னாங்கண்ணி பட்டி கிராமத்தை சுற்றியுள்ள ராயப்பட்டி, திருத்தியமலை, பச்சாலம்பட்டி மேட்டுப்பட்டி, நத்தம்பட்டி, சிறுகாம்பூர் உள்பட 100 கிராமங்களுக்கு சொந்தமான கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் அங்கிருந்து புறப்பட்டு புலிவலம் மற்றும் மணியம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் வேட்டைக்கு செல்வதை பாரம்பரியமாக வைத்துள்ளார்கள். அதேபோல் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று வேட்டையாட சென்றுள்ளனர். இதில் வேட்டையாட இருசக்கர வாகனங்களில் சென்ற 6 பேரை தடுத்து நிறுத்திய வனத்துறையினர், அவர்களை பிடித்து புலிவலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த 100 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு பெரமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மறியலால் திருச்சியில் இருந்து துறையூர் வந்த பஸ்களும், துறையூரில் இருந்து திருச்சி சென்ற பஸ்களும் ஆங்காங்கே சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த 6 பேரையும் புலிவலம் போலீஸ் நிலையத்தில் இருந்து திருச்சி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், புலிவலம் போலீசார் அங்கு வந்து 100 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் 6 பேரையும் விடுவித்தனர். இதனால் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக அவர்கள், எங்களுடைய பாரம்பரியமாக உள்ள வேட்டையை தடுக்கக்கூடாது. நாங்கள் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை என்று கூறினர். இந்த மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story