ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

X
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலின் உப கோவில்களான முகாசிபிடாரியூரில் உள்ள திருமுகமலர்ந்த நாதர் மற்றும் திருக்கை நாராயண பெருமாள் கோவில்களுக்கு சொந்தமாக 32 ஏக்கர் புன்செய் நிலங்கள் அட்டவணை பிடாரியூர் வருவாய் கிராமத்தில் 6 இடங்களில் உள்ளது. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடி ஆகும். இந்த நிலங்கள் 12 தனி நபர்களால் சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த ஆக்கிரமிப்புதாரார்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று இறுதியாக அறநிலையத்துறையின் ஈரோடு இணைய ஆணையர் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.விசாரணையின் முடிவில் இந்த நிலங்கள் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமானவை என்றும், அதனால் ஆக்கிரமிப்புதாரர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கடந்த 18-12-2024 மற்றும் 9-1-2025 ஆகிய தேதிகளில் இணை ஆணையர் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நகல்கள் ஆக்கிரமிப்புதாரர்கள் அனைவருக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த உத்தரவுக்கு உட்பட்டு ஆக்கிரமிப்புதாரர்கள் யாரும் கோவில் நிலங்களை கோவில் வசம் ஒப்படைக்காததால் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி தலைமையில், ஈரோடு உதவி ஆணையர் ரா.சுகுமார், செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்றி 6 இடங்களிலும் கோவிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கையுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை அறங்காவலர் குழு தலைவர் ஆர்.பழனிவேலு, உறுப்பினர்கள் மு.மனோகரன், வே.செ.பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) செல்வகுமார், கோவில் கண்காணிப்பாளர் மாணிக்கம், கோவில் ஆய்வாளர் ஸ்ரீ குகன், சென்னிமலை நில வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

