ஜாமீன் கிடைத்த பிறகு கைதிகளை சிறையில் வைப்பது மனித உரிமை மீறல்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

X

ஜாமீன் கிடைத்த பிறகும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவி்ல்லை என கூறி கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகள் தங்களுக்கு ஜாமீன் கிடைத்தும், நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறைகளிலேயே அடைத்து வைத்திருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில சட்டப்பணிகள் ஆணையம் தரப்பில், ஜாமீன் கிடைத்த பின்னரும் சிறையில் உள்ள கைதிகள் தொடர்பாக சிறை வாரியாக அறிக்கை பெறப்பட்டு அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தினசரி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுபோல சிறையில் உள்ள கைதிகளின் விவரங்களை மாநில சட்டப்பணிகள் ஆணையத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களிடமோ சிறைத்துறை அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்படும் பட்சத்தில் அவர் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஜாமீன் கிடைத்த பிறகும் அவர் சிறைக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டால் அது மனித உரிமை மீறல் என்றும் கருத்து தெரிவித்தனர். பின்னர் ஜாமீன் கிடைத்த கைதிகள் தங்களது குடும்ப சூழல் காரணமாக சிறையில் அடைத்து வைக்கப்படாமல் இருக்க மாநில சட்டப்பணிகள் ஆணை குழுவும், சிறைத்துறை நிர்வாகமும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Next Story