திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது - உயர் நீதிமன்றம்

X

திருப்பரங்குன்றம் மலையில் கால்நடைகளைப் பலியிடவும், அசைவம் சமைக்கவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக்கோரி மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த சோலை கண்ணன் என்பவரும், திருப்பரங்குன்றம் மலையின் மேலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை கோரி ராமலிங்கம் என்பவரும், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரி விழுப்புரம் ஸ்வஸ்திஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார், முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது, திருப்பரங்குன்றம் மலை இந்து மக்களால் ‘ஸ்கந்தமலை’ என்றும், இஸ்லாமியர்களால் ‘சிக்கந்தர் மலை’ என்றும், சமண சமயத்தவர்களால் ‘சமணர் குன்று’ என்றும், உள்ளூர் மக்களால் ‘திருப்பரங்குன்றம் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. தர்காவுக்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து சாப்பிடுவர். ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சமாதானக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தை சேர்ந்தவர்களும் இதுபோல வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது இங்கு வழக்கமாக உள்ளது. அதோடு 1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கான சிறப்பு விதிகளின்படி 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஒரு வழிபாட்டு தலம் எப்படி இருந்ததோ, அதே முறையிலேயே பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. பின்னர் மனுதாரர் சோலை கண்ணன் தரப்பு வழக்கறிஞர் சுந்தரேசன் வாதிடும்போது, ‘திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் இதுவரை ஆடு, கோழி பலியிடப்பட்டதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே ஆடு கோழி பலியிட தடை விதிக்க வேண்டும்’ என்றார். இடையீட்டு மனுதாரர் முத்துக்குமார் தரப்பில் வழக்கறிஞர் ராஜாராம் வாதிடும்போது, ‘திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கு செல்பவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்த பிறகே அனுமதிக்க வேண்டும்’ என்றார். இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் வாதிடும்போது, ‘வழிபாட்டுத் தலங்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை ஏதும் இல்லை. இதனால் சிக்கந்தர் தர்காவில் ஆடு, மாடு கோழி பலியிட அனுமதிக்க வேண்டும்’ என்றார். மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜ் வாதிடும்போது, ‘‘திருப்பரங்குன்றம் மலை முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஆடு, கோழி பலியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மலையில் எது செய்வதாக இருந்தாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். தொல்லியல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் தரவேண்டும்’ என்றார். இந்து அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக் வெங்கடாஜலபதி வாதிடும்போது, ‘இந்து சமயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் தொடர்ந்து சிலர் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பதிவிட்டு வருகின்றனர்’ என்றார். மாநில அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் வாதிடும்போது, ‘திருப்பரங்குன்றம் மலை விவகாரம் முடிந்துவிட்டது. விளம்பரத்துக்காக இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள்; சில மனிதர்கள்தான் சரியாக இல்லை" என தெரிவித்து, தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் தரப்பில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான உத்தரவுகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்.7-க்கு தள்ளிவைத்தனர்.
Next Story