பொதுமக்கள் எதிர்ப்பு

பொதுமக்கள் எதிர்ப்பு
X
சென்னிமலை அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான பாதையில் இரும்பு தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னிமலை அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான பாதையில் இரும்பு தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக அங்கு பணிகள் நிறுத்தப்பட்டு மறுபுறத்தில் தடுப்புக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கும், பெங்களூருவுக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்களை கடக்கும் கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களும் ரயிலில் அடிபட்டு இறந்துவிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதுபோல் வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள் செல்லும்போது திடீரென குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தை கடந்தால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விடும் என்பதற்காக ரயில்வே துறை சார்பில் தற்போது தண்டவாளத்தில் இரு ஓரங்களிலும் இரும்பு தடுப்புக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தின் இரு புறங்களிலும் 19 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் தற்போது கோவையில் இருந்து திருப்பூர், ஊத்துக்குளி வழியாக ஈரோடு மாவட்ட பகுதிக்குள் தண்டவாளத்தின் இரு ஓரங்களிலும் இரும்பு தடுப்புக்கள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட துலுக்கம்பாளையம் மற்றும் ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிப்காட் ஆகிய பகுதிகளுக்கு இடையே செல்லும் ரயில் தண்டவாளத்தின் இரு ஓரங்களிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரும்பு தடுப்புக்கள் அமைக்கு பணி தொடங்கப்பட்டது. துலுக்கம்பாளையம் வழியாக பெருந்துறை சிப்காட் பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரயில்வே துறைக்கு சொந்தமான பாதையில் சுமார் 300 மீட்டர் தூரம் சென்று பின்னர் அங்குள்ள சிறிய ரயில்வே நுழைவு பாலத்திற்குள் நுழைந்து சென்று வந்தனர். ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்படுத்திய இந்த பாதையை தடுக்கும் வகையில் ரயில்வே துறையினர் இரும்பு தடுப்புக்கள் அமைக்கும் பணியை தொடங்கியதால் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாதையை பயன்படுத்தி வந்ததாகவும், இந்த பாதையை அடைத்தால் பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, தோப்புப்பாளையம், துலுக்கம்பாளையம், மாடுகட்டிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும்போது கூடுதலாக 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஈங்கூர் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதனால் ரயில்வே துறைக்கு சொந்தமான பாதையாக இருந்தாலும் எங்களுக்கு இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் தடுப்புக்கள் அமைக்க கூடாது என ரயில்வே துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் ஆகியோரிடமும் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2 மாதத்திற்கு மட்டும் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையில் இரும்பு தடுப்புக்கள் அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பதாகவும், அதற்குள் ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள் மூலம் நிரந்தர தீர்வு தேடி கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தற்போது அங்கு இரும்பு தடுப்புக்கள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மறு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தீவிரமாக இரும்பு தடுப்புக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story