குமரி :சார் பதிவாளருக்கு சிறை

X
கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி சார் பதிவாளராக இருந்தவர் சுயம்புலிங்கம். கடந்த 2012 ஆம் ஆண்டு ரவி அசோகன் என்பவர் தனக்கு உரிமை பட்ட சொத்தின் ஆவணம் சான்றிட்ட நகல் வழங்க கோரி இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக இருந்த சுயம்புலிங்கத்திடம் கடந்த 18-12-2012 அன்று மனு சமர்ப்பித்து உள்ளார். மனுவை பெற்ற சார்பதிவாளர் சுயம்புலிங்கம் சான்றிட்ட மனு வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி அசோகன் அது குறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சுந்தர்ராஜ் 2000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுக்கும்போது சார்பதிவாளர் சுயம்பு லிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் விசாரணை முடித்து நேற்று 25-03-2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் மேற்படி வழக்கில் எதிரியான சார் பதிவாளர் சுயம்புலிங்கத்திற்கு இரண்டு சட்ட பிரிவுகளுக்கு தலா மூன்று வருட சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கை சிறப்பு அரசு வழக்கறிஞர் கண்ணன் அவர்கள் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

