பாவை கல்லூரியில் ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி

பாவை கல்லூரியில் ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி
X
பாவை கல்லூரியில் ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி
பாவை கல்வி நிறுவனங்கள் - ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பான அமொிக்க பர்டுயூ பல்கலைக்கழகத்திலிருந்து, பாவை கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்துள்ள ஏ.ஐ தொழில்நுட்ப விற்பன்னரும், மூத்த பேராசிரியருமான முனைவர் கார்த்திக் ரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தொிவித்ததாவது: ஏ.ஐ தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டுள்ள, தற்காலத்திற்கு மிகவும் தேவையான தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் உலகளவில் பரவலாக அனைத்து துறைகளிலும் ஆட்சி செய்யத் துவங்கி விட்டது. இளைஞர்கள் மிகுந்துள்ள இந்தியா போன்ற நாடுகளில் கணினி மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப பாடங்களை கற்றறிந்த பொறியியல் மாணவர்கள் ஏராளமாக இருப்பதால் எப்படி மென்பொருள் துறையில் உலகளாவில் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளதோ, அதே போன்று ஏ.ஐ தொழில்நுட்பத்திலும் இந்தியா கோலோச்சும். இந்த தொழில்நுட்பம் சம்பந்தமான பாடங்களை தங்களுடைய பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாகக் கொண்டு, தன்னாட்சியுடன் இயங்கி வரும் பாவை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஒருங்கிணைந்த ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கணினியியல், மின்னியல், மின்னணுவியல், இயந்திரவியல், கட்டிடவியல், வேளாண்மை பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், மருத்துவ மின்னியல், மருந்து பொறியியல் துறை, உயிரி பொறியியல் மற்றும் அனைத்து துறைகளிலும் பாடத்திட்டங்களை வகுத்து, அவர்களை வருங்காலத்தில் மிகச்சிறந்த ஏ.ஐ தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை பர்டுயூ பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் இணைந்து, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், வழிவகை செய்திட முன்னெடுப்புகள் நடந்து கொண்டுள்ளன. அதற்காக இரு தினங்கள் நோில் இங்கு வருகை தந்து, பல தொடர் பயிற்சி பட்டறைகளை, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடத்திக் கொண்டுள்ளோம். தொடர்ந்து இணைய வழியிலும் மேற்படி பயிற்சிகள் நடைபெறும். தற்போதே ஏ.ஐ தொழில்நுட்பத்தை தங்கள் பாடத்திட்டங்களில் வெகுவாக புகுத்தியுள்ள பாவை கல்வி நிறுவனங்கள், எதிர் வருகிற சமீப காலத்திலேயே மிகச்சிறந்த பங்களிப்பினை இவ்வுலகிற்கு அளிக்க உள்ளனர். மாணவர்களுடைய பல்வேறு திட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவைகள் அனைத்தும் இன்னும் சற்று மெருகேற்றப்பட்டால் எளிதில் அவைகள் சந்தைப்படுத்தப்பட்டு, விவசாயம், உற்பத்தி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளிலும் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். அதற்காக பாவை கல்வி நிறுவனங்கள் பர்டுயூ பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இணைந்து செயல்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஏ.ஐ தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டால், அது மனித சக்திக்கு மாற்றாக அமைந்து விடும் என்று யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. எப்படி துவக்கத்தில் கணினிமயமாக்கம் வேலைகளை குறைத்து விடும் என்ற தேவையில்லாமல் அச்சம் ஏற்பட்டதோ, அதுபோலத் தான் இதுவும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் காரணமாக நேரம் மீதப்படுவதால், வேலையின் மீதான கவனம் அதிகமாகி, தரம் உயரும். அதனால் வேலைவாய்ப்புகளும், அதற்கான ஊதியமும் அதிகமாகுமே தவிர குறையாது. ஏந்தவொரு தொழில்நுட்பமாயினும் மனித இனத்தை மாண்புறு வழியில் செலுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் என்றால், நாம் அது பற்றிய அச்சம் கொள்ளத் தேவையில்லை. எங்கும், எதிலும் ஏ.ஐ என்ற நிலை வரும் போது, இந்த துறையில் வல்லுநராக உள்ள அனைவரும் வேலைவாய்ப்பினைப் பெறுவர். ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் அனைத்து பாடப்பிரிவுகளும், சமப்படுத்தப்பட்டும், ஒருங்கிணைக்கப்பட்டும், பாவை கல்வி நிறுவனங்கள் நடந்து வருவதால், அனைத்து பிரிவு மாணவர்களும், ஒரு உன்னதமான எதிர்காலத்தை கொண்டுள்ளனர் என அறிய முடியும். இவர்களால் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி அதிகமாகும். உலகளவில் இந்தியா மிகப்பொிய உயரத்தை எட்ட முடியும். இவ்வாறு பாவை கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்துள்ள அமொிக்க பர்டுயூ பல்கலைக்கழகத்தின் ஏ.ஐ பேராசிரியர் முனைவர் கார்த்திக் ரமணி பத்திரிக்கையாளர்களிடம் தொிவித்தார். பாவை கல்வி நிறுவனர் தலைவர் ஆடிட்டர் திரு.என்.வி.நடராஜன், இயக்குநர் ஆராய்ச்சி முனைவர்.கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் முனைவர் எம்.பிரேம்குமார், முதன்மையர் (கல்வி) முனைவர் செல்வி, ஒருங்கிணைப்பாளரும், பாவை திறன் வளர் மையப் பொறுப்பாளருமான கமலா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
Next Story