நூற்பாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திவாலாகிய நிலையில், அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு இதுவரை பண பலன்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி ஆலையை முற்றுகையிட்டு தொழிலாளர்

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் இயங்கி வந்த வெங்கட்ராமன் நூற்பாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திவாலாகிய நிலையில், அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு இதுவரை பண பலன்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி ஆலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வெங்கட்ராமன் நூற்பாலை 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இங்கு 800 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். மூன்று வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சில வருடங்களுக்கு முன் இந்த ஆலை திவாலாகி பூட்டப்பட்டது. கொடுத்த கடனுக்கு ஆலையை பறிமுதல் செய்த வங்கி நிர்வாகம் மீண்டும் தொடர்ந்து ஆலையை நடத்துவோம் என அங்கு வேலை பார்த்த ஊழியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மீண்டும் வேலை கிடைக்கும் என நம்பிய தொழிலாளர்கள் தற்காலிகமாக கிடைத்த வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆலையில் இருந்த இயந்திரங்களை கழற்றி வங்கி நிர்வாகத்தினர் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை அறிந்த தொழிலாளர்கள் நேரில் சென்று வங்கியின் திவால் அதிகாரியிடம் கேட்ட போது, முறையான பதில் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, பண்டிகை விடுமுறை நாள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பண பலன்களை வழங்க கோரி பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னதாக ஆலைக்குள் நுழைந்த தொழிலாளர்கள் இயந்திரங்களை கழற்றிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் தங்களது நிலையை எடுத்துக் கூறி இயந்திரங்களை பிரிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து நடந்த போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஆலையில் வேலை பார்த்த முன்னாள் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தங்களுக்கு சேர வேண்டிய உரிய பண பலன்களை பெற்றுத் தர அரசும், மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.
Next Story

