கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தால் குண்டர் சட்டம்

X
சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சட்ட விரோத கருக்கலைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சமூக சூழலில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதுடன் கர்ப்பிணிகளின் உயிருக்கே ஆபத்துகள் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே சட்ட விரோதமாக கருக்கலைப்புகள் நடைபெறாமல் இருக்க மருத்துவத்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வது அல்லது டாக்டரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எந்த ஒரு ஆஸ்பத்திரியிலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலமாக அல்லது வேறு பரிசோதனை மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்தால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி அல்லது ஸ்கேன் மையத்தின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய டாக்டரின் மெடிக்கல் கவுன்சில் பதிவு எண் ரத்து செய்யப்படும். மேலும் அவரின் மருத்துவ பணியை நிரந்தரமாக மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்தால் அதில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். பாலினம் கண்டறிதல் தொடர்பான புகார்களை நலப்பணிகள் இணை இயக்குனரின் 73581-22042 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Next Story

