சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் அழகு குத்து விழா

சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் அழகு குத்து விழா
X
பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலமும், சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மதியம் 1 மணியளவில் குமாரசாமிப்பட்டி, வின்சென்ட், அஸ்தம்பட்டி பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர். சேலம் காந்திரோடு பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் விமான அலகு குத்தி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர, மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அக்னி கரகமும், பூங்கரகத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காந்திரோடு, வின்சென்ட் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Next Story