நீலகிரி மாவட்டத்தில் சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு. வருகின்ற 30 ஆம் தேதி மஞ்சூர் பகுதியில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுடன் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளதாக நாக்குபெட்டா படுகர் நல சங்கம் மற்றும் இளைஞர் படுகர் நல சங்கத்தினர் அறிவிப்பு. கடந்த, 2013ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், 110 விதியின் கீழ், 7000 கோடி ரூபாய் மதிப்பில், 1000 மெகாவாட் மின் திட்டமான, 'சில்ஹல்லா' மின் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்திற்காக, எடக்காடு அருகே பிக்குலி, மஞ்சூர் அருகே அன்னமலை கோவில் அடிவாரத்தில் அணை கட்டவும்; மஞ்சூர், கோவை சாலையில் பெரும் பள்ளத்தில் மின் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நாக்கு பெட்டா படுகர் நல சங்கம் மற்றும் இளைஞர் படுகர் நல சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களும் பேசிய சங்கத்தினர், தமிழக அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவையற்ற சில்ஹல்லா நீர் மின் நிலைய திட்டத்தை கைவிட வேண்டும். குந்தா, அப்பர் பவானி, பைக்காரா, கெத்தை உள்ளிட்ட அணைகளில் தேக்கப்படும் நீரினை கொண்டு 830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் சில்ஹல்லா நீர் மின் திட்டத்தை கைவிட்டு தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வரும் அணைகளில் பராமரித்து அதிலிருந்து அதிக மின் உற்பத்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என நாக்குபெட்டா படுகர் சங்கம் மற்றும் இளைஞர் படுகர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த திட்டத்தால், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்கு மனிதர்களை தாக்கும் அபாயம் அதிகரிக்கும் எனவும், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் கனரக வாகனங்களால் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இத்திட்டத்தினை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அழைத்து வரும் 30ஆம் தேதி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story




