சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
X
பெரும்பாலான சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் தலைகவசம் அணியாமல் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு வரை ஏற்படுகிறது. இதை தவிர்த்திடும் வகையில் தலைகவசம் அணிவதும், 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிவதை போக்குவரத்து காவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (27.03.2025) நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளின் அடிப்படையில், அப்பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்றும், அந்த நடவடிக்கைகளுக்கு பிறகு விபத்துகள் நடப்பது குறைந்துள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து, ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் தலைகவசம் அணியாமல் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு வரை ஏற்படுகிறது. இதை தவிர்த்திடும் வகையில் தலைகவசம் அணிவதும், 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிவதை போக்குவரத்து காவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு போதிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவது ஆய்வின்போது கண்டறிந்தால் சிறுவர்களின் பெற்றோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினர். வாகனம் இயக்குபவர்கள் கண்டிப்பாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் நபர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மாநில நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்திய மாவட்ட ஆட்சியர், ஏற்கனவே வேகத்தடைகள் இருக்கும் இடங்களில் அவற்றில் வெள்ளை வண்ணம் பூசவும், விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் அவற்றை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு ஏற்படக்கூடிய பகுதிகள், புதிதாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் ஏதேனும் இருப்பின் ஆரம்ப நிலையிலேயே வருவாய்துறை அலுவலர்களும் காவல்துறையினரும் இணைந்து அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதியான சூழலை ஏற்படுத்திட வேண்டும். மாண்பமை சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அறிவுறுத்தியதன் அடிப்படையில் பொதுஇடங்களில் புதிதாக கொடி கம்பங்கள் நிறுவுவதற்கு அனுமதிக்க கூடாது. ஏற்கனவே அனுமதியில்லாமல், நிறுவப்பட்டுள்ள கொடி கம்பங்களை இரண்டு வாரங்களுக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்துறை அலுவலர்கள் காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை காவல்துறையினர் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், முக்கியமான சாலை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி பொருத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் சு.கோகுல் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்(குற்றவியல்) சிவா, அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story