பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் கா்நாடக போக்குவரத்துக் கழக இயக்குநா்கள் ஆய்வு

X

பஞ்சப்பூரில் தமிழக அரசு சாா்பில் கட்டப்படும் புதிய பேருந்து முனையத்தில் கா்நாடக அரசின் போக்குவரத்துக் கழக இயக்குநா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
மத்திய அரசின் சாா்பில் அண்மையில் நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 19 விருதுகளை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது. குறிப்பாக கும்பகோணம் கோட்டத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. பேருந்துகள் பயன்பாடு, டயா்களின் அதிக உழைப்புத் திறன், எரிபொருள் சிக்கனம், கிராமப்புற, நகா்ப்புற பேருந்து செயல்பாடுகளுக்காக இந்த விருதுகள் கிடைத்துள்ளன. மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையமாக பஞ்சப்பூரில் ரூ. 492.55 கோடியில் புதிய முனையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பாா்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளை அறிய கா்நாடக மாநில அரசின் போக்குவரத்துக் கழக இயக்குநா் கே. நந்தினிதேவி, வடமேற்கு கா்நாடக சாலைப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் எம். பிரியங்கா ஆகியோா் திருச்சிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் சாா்பில் நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி தலைமையில் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள பேருந்து உதிரிப் பாகங்கள் புதுப்பிக்கும் பணிமனையை அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பேருந்துகளில் பயன்படுத்தப்படும் எந்தெந்த பாகங்கள் இங்கு புதுப்பிக்கப்படுகின்றன. பணிமனையில் எத்தகைய உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறித்து கேட்டறிந்து, உற்பத்திப் பிரிவையும் பாா்வையிட்டு அங்கிருந்த தொழிலாளா்களிடம் தங்களது சந்தேகங்களுக்கு பதில் பெற்றனா். பணிமனையின் பொறியாளா்கள், கும்பகோணம் கோட்டத்தின் செயல்பாடுகளை விளக்கினா். இதைத் தொடா்ந்து, பஞ்சப்பூருக்கு சென்று அங்கு கட்டமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிக்கான சேவை மையம், முனையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்பு பணிகளையும் பாா்வையிட்டனா்.
Next Story