சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது

X
சேலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். ஏனென்றால் தனிச்சுவை கொண்ட சேலம் மாம்பழத்திற்கு உள்ளூர் முதல் உலக அளவில் நல்ல மவுசும், வரவேற்பும் உண்டு. சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மாம்பழ சீசன் களைகட்டும். அந்த வகையில் இந்தாண்டு சேலத்தில் மார்ச் மாதத்தின் இறுதியில் தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி உள்ளது. சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப் பட்டணம், வரகம்பாடி, அடிமலைப்புதூர், செட்டிச்சாவடி, சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் மாந்தோப்புகள் உள்ளன. அதாவது, சேலம் மல்கோவா, செந்தூரா, சேலம் பெங்களூரா, அல்போன்சா, இமாம்பசந்த், நடுசாளை, பங்கனப்பள்ளி, குண்டு ஆகிய மாம்பழ ரகங்கள் அதிகளவில் விளைகின்றன. இதுதவிர, மேட்டூர் அருகே நங்கவள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சூரப்பள்ளி, வீரக்கல், சாணாரப்பட்டி, சோரகை, மூலக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன. மாங்கனி உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தையும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளது. சேலம் மார்க்கெட்டிற்கு சேலம் மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் மாம்பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சேலம் கடைவீதி முதல் அக்ரஹாரம், சின்னக்கடைவீதி பகுதிகளில் உள்ள மாம்பழ குடோன்களில் மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. சேலத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இனிவரும் நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

