சேலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு

X
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மெய்யனூர் செல்லும் சாலையில் 200 மீட்டர் தொலைவிற்குள் அடுத்தடுத்து 5 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் அங்கு மது அருந்த வருபவர்களால் அடிக்கடி விபத்துக்களும், போக்குவரத்து இடையூறுகளும் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால் இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, டாஸ்மாக் கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மெய்யனூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டம் தொடர்பாக சேலம் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று தாசில்தார் மனோகரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் மற்றும் நிர்வாகிகள், பள்ளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வருகிற மே 1-ந் தேதிக்குள் மெய்யனூர் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story

