சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா?

X

அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளையொட்டி அரசு அனுமதி பெற்று பார்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மது விற்பனையில் குறிப்பிட்ட சதவீத தொகையை சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மாதம் ஒருமுறை செலுத்த வேண்டும். ஆனால் மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்படுவதாகவும், சிலர் அதன் உரிமத்தை புதுப்பிக்காமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தாசில்தார்கள் பார்த்தசாரதி, செல்லதுரை, ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய 3 குழுவினர் மாவட்டம் முழுவதும் சென்று அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் ஏதேனும் செயல்படுகிறதா? என ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகரில் எத்தனை டாஸ்மாக் பார்கள் அனுமதியுடன் செயல்படுகிறது? என்றும், அவர்கள் அதன் உரிமத்தை முறையாக புதுப்பித்து வருகிறார்களா? என்றும் டாஸ்மாக் பார்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதியின்றி பார்கள் செயல்படுவது தெரியவந்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறு டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தினர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. உரிமம் புதுப்பிக்காமலும், முறைகேடாகவும் செயல்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பார்களை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், டாஸ்மாக் கடைகள் அருகில் சந்துக்கடைகளை வைத்து மது விற்பனை செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். இதுவரை நடந்த ஆய்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இருப்பினும், தொடர்ந்து டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும், என்றனர்.
Next Story