கல்லாத்தூர் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு

கல்லாத்தூர் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
X
ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர், மார்ச்.29 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் ஊராட்சி மாங்கொட்டை தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் மாங்கோட்டை தெரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கமிட்டி அம்மன் கோயில் தெரு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட 2 மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் குடிநீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் கல்லாத்தூர் மெயின் ரோடு பஸ் நிறுத்தம் எதிரே சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.தொடர்ந்து தற்காலிகமாக தண்ணி லாரி மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பழுதான மின்மோட்டாரை அப்புறப்படுத்தி புதிய மின் மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் மறியல் போராட்டம் காரணமாக விருத்தாச்சலம் -ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story